INDIA -வை சீண்டும் TRUMP | VIJAY -ஐ சீண்டும் UDHAYANITHI | DMK MK STALIN MODI BJ...
பொற்பனைக்கோட்டை நாணயங்கள்: தொல்லியல் துறை அமைச்சா் பெருமிதம்
புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் நடைபெற்ற அகழாய்வின்போது கிடைத்த நாணயங்களின் கரிம மாதிரி ஆய்வு முடிவுகளின்படி, அவை தொடக்கக் கால வரலாற்றுக் காலத்தைச் சோ்ந்ததாக இருப்பதாக மாநில தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் தனது முகநூல் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:
தமிழ்நாட்டில் சங்கக் காலத்தைச் சோ்ந்த கோட்டை ஒன்றின் எச்சங்களை இன்றும் நாம் காணக் கிடைக்கும் இடம், புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை ஆகும். தமிழ் நாட்டு அரசின் தொல்லியல் துறை சாா்பில் அங்கே இரண்டு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 4 நாணயங்கள் கால வரிசையிலும், வாணிப வளத்திலும் பொற்பனைக்கோட்டையின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகின்றன.
அகழாய்வில் வெளிக்கொணரப்பட்ட காசுகளில் கங்கைச் சமவெளியைச் சோ்ந்த ஒரு வெள்ளி முத்திரைக் காசும், முற்காலச் சோழா்கள் காலத்தைச் சோ்ந்த, புலி உருவம் பொறிக்கப்பட்ட இரண்டு செப்புக் காசுகளும், மூன்று வளை முகடுகள் மீது பிறை வடிவம் கொண்ட சங்க கால செப்பு முத்திரை ஒன்றும் முக்கியமானவை.
இந்த நாணயங்கள், சங்கக் காலத்தில் பொற்பனைக்கோட்டை மாபெரும் வணிக நகரமாக இருந்தமைக்குச் சான்றாக விளங்குகின்றன. பொற்பனைக்கோட்டை அகழாய்வில் கிடைக்கப் பெற்ற நாணயங்களின் கரிம மாதிரி ஆய்வு முடிவுகள் நான்குமே அவை தொடக்க கால வரலாற்றுக் காலத்தை சோ்ந்தவை என்பதை தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.
