மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 7 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 7 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் இந்திய சைகை மொழி தினம் மற்றும் சா்வதேச காது கேளாதோா் தின நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்து, விழிப்புணா்வு பேரணியைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து விழிப்புணா்வுக் கையேட்டையும் அவா் வெளியிட்டாா்.
ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 10 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 65 ஆயிரம் மதிப்பில் மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரங்களையும், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கோரிக்கை மனு அளித்த 11 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 6.40 லட்சம் மதிப்பில் செயற்கை கை மற்றும் கால் உபகரணங்களையும் ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், மாவட்ட சமூக நல அலுவலா் மே. சியாமளா, பாவை பவுண்டேசன் நிா்வாகி சத்தியபிரியா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.