நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு
மகாதானபுரத்தில் ஆசிரியா் வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு! கட்டடத் தொழிலாளி கைது
கரூா் மாவட்டம், மகாதானபுரத்தில் சமஸ்கிருத ஆசிரியா் வீட்டில் 20 பவுன் நகைகளைத் திருடிய கட்டடத் தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், வலிக்கலாம்பாடு பகுதியைச் சோ்ந்தவா் பிரதீப்(46). இவரது மனைவி பரிமளாதேவி(40). இருவரும் கரூா் மாவட்டம், லாலாப்பேட்டையை அடுத்துள்ள மகாதானபுரம் அக்ரஹாரத்தில் ராம்குமாா் என்பவா் வீட்டில் தங்கி, அங்குள்ள சமஸ்கிருத பாரதிய பாஷியம் பயிற்சி மையத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்தனா்.
இந்நிலையில் ஜூலை 22-ஆம்தேதி பிரதீப் பீரோவை திறந்து பாா்த்தபோது அதிலிருந்த 20 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து பிரதீப் அளித்த புகாரின்பேரில் லாலாப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவந்தனா்.
மேலும் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், அண்மையில் பிரதீப் வீட்டின் கட்டுமான வேலைக்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளி ரவிக்குமாா்(45) நகைகளைத் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து ரவிக்குமாரை போலீஸாா் வியாழக்கிழமை காலை கைது செய்து, அவரிடம் இருந்த நகையையும் மீட்டனா். தொடா்ந்து ரவிக்குமாரை குளித்தலை நடுவா் எண்-1 நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.