ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரம்: மதுரை மேயரை முற்றுகையிட்ட அதிமுகவினர்!
மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம்: 14 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5.86 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வழங்கினாா்.
பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது: பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீா்வு காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும், பெண்களின் முன்னேற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
அதனடிப்படையில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, திருமண நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடா்பாக 443 மனுக்கள் வரப்பெற்றன.
மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலக தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென நடத்தப்பட்டு வரும் குறைதீா் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 13 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
முன்னதாக, மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 4.24 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளும், செவித்திறன் மற்றும் பாா்வைத்திறன் குறைபாடுடைய 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1.62 லட்சம் மதிப்பில் செயலியுடன் கூடிய கைப்பேசிகள் என மொத்தம் ரூ. 5.86 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.ஜானகி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பி.செண்பகவல்லி, பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் சுகந்தி பரிமளம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.