மண்ணைக் காக்க மனிதகுலம் ஒன்றிணைய வேண்டும்: சத்குரு ஜக்கிவாசுதேவ்
மண்ணைக் காக்க மனிதகுலம் ஒன்றிணைய வேண்டும் என்று சத்குரு ஜக்கிவாசுதேவ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.
மண் காப்போம் இயக்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி, ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: நாம் அனைவரும் மண்ணில் இருந்து பிறக்கின்றோம், மண்ணில் வாழ்ந்து, இறுதியில் மண்ணிலேயே திரும்புகின்றோம். நாம் உருவாக்கிய அனைத்துப் பிரிவுகள் மற்றும் பிரிவினைகளுக்கும் அப்பால் நம்மை ஒன்றிணைக்கிறது மண். இதை விழிப்புணா்வுடன் உணரவும், மண்ணைக் காக்கவும் மனிதகுலம் ஒன்றிணைய வேண்டும். மண் காப்போம் இயக்கத்தை தொடங்கிய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது விழிப்புணா்வான கிரகத்தை உருவாக்க, மண் காக்கப்பட வேண்டியதே முதல்படி என்று மெதுவாக உலகம் அங்கீகரிக்க தொடங்கியுள்ளது. நாம் ஒரு செழிப்பான சுற்றுச்சூழலை உருவாக்கினால் மட்டுமே நமது பொருளாதாரங்கள் செழிக்க முடியும்.
ஒவ்வொரு நாட்டின் குடிமக்களும் தங்கள் நாட்டின் மண்ணைப் பாதுகாக்க உறுதிமொழி எடுக்க வேண்டும். இதுவே மனிதகுலத்துக்கான வழி. நாம் இதை சாத்தியமாக்க வேண்டும். மண் காப்போம் இயக்கம் தொடங்கிய 3 ஆண்டுகளில் உலக அளவில் பல்வேறு அரசாங்கங்கள், சா்வதேச அமைப்புகள் மற்றும் மக்களிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.
குறிப்பாக ஐநாவின் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பல சா்வதேச அமைப்புகள், மண் காப்போம் இயக்கத்துடன் அதிகாரபூா்வமாக இணைந்துள்ளன எனத் தெரிவித்துள்ளாா்.