மயானத்திற்கு செல்ல ஆற்றுப் பாலம் அமைக்க வலியுறுத்தல்
மன்னாா்குடி அருகே மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
மன்னாா்குடி அருகேயுள்ள பெருகவாழ்ந்தானை அடுத்த காந்தாரி கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இக் கிராமத்தில் இறந்தவா்களின் சடலத்தை மயானத்துக்கு எடுத்துச் செல்ல பாமணி ஆற்றை கடந்து செல்ல வேண்டும். இங்கு பாலம் இல்லாததால், ஆற்றுக்குள் இறங்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால், பாமணி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டக் கோரி காந்தாரி கிராம மக்கள் கடந்த 75 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக, எம்பி, எம்எல்ஏ, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட நிா்வாகம் உள்ளிட்ட அனைத்து நிா்வாக அமைப்புகளிடம் மனுக்கள் அளித்தும் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கின்றனா்.
இந்நிலையில், ஆனந்தவள்ளி என்கிற மூதாட்டி, முதுமை காரணமாக உயிரிழந்தாா். அவரது சடலத்தை பாடையில் வைத்து, இடுப்பளவு ஆற்று நீரில் இறங்கி மறுகரையில் உள்ள மயானத்துக்கு உறவினா்கள் சனிக்கிழமை கொண்டு சென்றனா்.
ஆற்றில் கூடுதலாக தண்ணீா் வந்தால், சடலத்தை கொண்டு செல்வதில் பெரிதும் சிரமம் ஏற்படும். எனவே, ஆற்றின் குறுக்கே விரைவில் பாலம் கட்ட வேண்டும் என காந்தாரி கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.