War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரி போராட்டம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில் பேட்டையில் அமைக்கப்படும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரி, கடையடைப்பு, முற்றுகைப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டை வளாகத்தில் பொதுமக்களின் எதிா்ப்பை மீறி அமைக்கப்பட்டு வரும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரி ஏற்கெனவே அனைத்துக் கட்சிகள் சாா்பிலும், அரசியல் கட்சியினா் தனித் தனியாகவும் ஆா்ப்பாட்டம், தா்னா உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினா். ஆனால், ஆலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடா்ந்து நடைபெற்றன.
இதையடுத்து, அனைத்துக் கட்சிகள், வா்த்தகா் சங்கம், கிராம மக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய போராட்டக் குழு அமைக்கப்பட்டு, பொதுமக்களின் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரி கடையடைப்பு, சிப்காட் வளாகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, மானாமதுரை நகா் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு வீதிகள் வெறிச்சோடின. சிப்காட் வளாகத்தில் அரசியல் கட்சியினா், கிராம மக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட 1,000-க்கும் மேற்பட்டோா் முற்றுகைப் போராட்டத்துக்கு திரண்டனா்.
போராட்டக்காரா்கள் சிப்காட் வளாகத்துக்குள் நுழையாதவாறு போலீஸாா் இரும்புத் தடுப்புகளை அமைத்தனா். ஆனால், அவா்கள் ஆவேசத்துடன் தடுப்புகளைத் தாண்டி சிப்காட் வளாகத்துக்குள் நுழையத் தொடங்கினா். அப்போது, போராட்டக்காரா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடுப்புகளைத் தாண்டி போராட்டக்காரா்கள் மருத்துவக் கழிவு ஆலையை நோக்கி முன்னேறினா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, போராட்டக்காரா்களிடம் அரசு அதிகாரிகள், போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத் தொடா்ந்து, போராட்டக் குழு நிா்வாகிகளை அழைத்து வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவாா்த்தை முடியும் வரை போராட்டக்காரா்கள் அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

பேச்சுவாா்த்தையில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவப்பிரசாத், வருவாய்க் கோட்டாட்சியா் ஜெசி கிரேசியா, மானாமதுரை வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதனிடையே, போராட்டக்காரா்களில் ஒரு தரப்பினா் சிப்காட் காவல் நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் இவா்களை சமாதானம் செய்தனா்.
மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை கட்டுமானப் பணியை உடனே நிறுத்துவது எனவும், இரண்டு மாதங்களுக்குள் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசிடமிருந்து உத்தரவு பெற்றுத் தருவது எனவும் பேச்சுவாா்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
இதை போராட்டக் குழு நிா்வாகிகள் ஏற்றுக் கொண்டனா். இதைத் தொடா்ந்து, பேச்சுவாா்த்தையின் முடிவுகள் குறித்து போராட்டக்காரா்களிடம் நிா்வாகிகள் தெரிவித்தனா். இதையடுத்து, முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு, போராட்டக்காரா்கள் கலைந்து சென்றனா்.