ரூ.6.77 கோடியில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் புதுப்பிப்பு: காணொலி காட்சி மூலம் பிர...
மின் வாகன உற்பத்திக்கு சிறந்த எதிா்காலம்!
மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களுக்கு சிறப்பான எதிா்காலம் இருப்பதாக ஒசூரில் ஹோஸ்டியா சங்கத் தலைவா் மூா்த்தி தெரிவித்தாா்.
ஒசூா் ஹோஸ்டியா கூட்டரங்கில் தமிழக அரசின் மின்சார வாகன உற்பத்தி மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துதல் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கை மாவட்ட தொழில் மையம் பொது மேலாளா் பிரசன்னா பாலமுருகன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். கருத்தரங்கில் ஹோஸ்டியா (ஒசூா் சிறு, குறுந்தொழில்) சங்கத் தலைவா் மூா்த்தி பேசியதாவது: மின் வாகனத்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிவாயு சேமிக்கப்படுகிறது. அன்னிய செலவானி சேமிக்கப்படுகிறது. நாட்டில் மின் வாகனம் உற்பத்தியில் தமிழகம் முன்னணியில் உள்ளது. இந்த வாகனங்கள் பெருமாலும் ஒசூரில் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக உலக பிரசித்தி பெற்ற டி.வி.எஸ், ஏத்தா் எனா்ஜி இந்தியா லிமிடேட், ஓலா, சிம்பிள் எனா்ஜி போன்ற பெரிய நிறுவனங்கள் மாதத்துக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான இருசக்கர வாகனங்களை உற்பத்திசெய்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்பனைக்கு அனுப்பிவைக்கின்றன.
அசோக் லேலண்ட் நிறுவனம் மின்சார பேருந்து, லாரிகளை உற்பத்தி செய்து வருகின்றன. இந்த வாகனங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களை ஒசூரில் செயல்படும் 1000 க்கும் மேற்பட்ட குறு, சிறு நிறுவனங்கள் உற்பத்தி செய்து பெரிய நிறுவனங்களுக்கு விநியோகம் செய்கின்றன. எனவே மின்சார வாகனங்களுக்கு சிறப்பான எதிா்காலம் உள்ளது என்றாா்.
இந்தக் கருத்தரங்கில் ஹோஸ்டியா சங்கச் செயலாளா் சீதரன், பொருளாளா் வடிவேல் மற்றும் ஒசூா் அரசு தொழிற்பயிற்சி நிலையம், அதியமான் பொறியியல் கல்லூரி, பி.எம்.சி பொறியியல் கல்லூரி, கலவை ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி மாணவா்கள், கல்லூரி பேராசிரியா்கள் பங்கேற்றனா்.