வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு
மோகனூரில் நிதி நிறுவன உரிமையாளா் வெட்டிக் கொலை
நாமக்கல் மாவட்டம், மோகனூா் பகுதியில் நிதி நிறுவன உரிமையாளா் கூலிப்படையினரால் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள ஈச்சவாரி கிராமத்தைச் சோ்ந்தவா் அருள்தாஸ் (40). இவருக்கு பிரேமா என்ற மனைவியும், மித்திரன் (7) என்ற மகனும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனா்.
இவா், நாமக்கல் - சேலம் சாலையில் நிதி நிறுவனம் நடத்திவந்த நிலையில், நிதி நிறுவனம் நஷ்டம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தொடா்ந்து வட்டிக்கு பணம் கொடுத்து வசூல்செய்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம்போல உடற்பயிற்சிக் கூடத்துக்கு சென்றுவிட்டு காலை 11 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அவரது வீட்டருகே காத்திருந்த 4 போ் கொண்ட கூலிப்படையினா், அருள்தாஸ் வந்த வாகனத்தை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக அவரை வெட்டினா். அவரது அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் திரண்டு வந்தனா். இதைக் கண்ட கூலிப்படையினா் ஆயுதங்களை அங்கேயே போட்டுவிட்டு சரக்கு ஆட்டோவில் தப்பிச்சென்றனா்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அருள்தாஸை மீட்ட அப்பகுதியினா், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
ஆட்டோவில் தப்பிச்சென்ற கூலிப்படையினா் அணியாபுரம் அருகே உள்ள கொங்களத்தம்மன் கோயில் அருகே சென்றபோது, சரக்கு ஆட்டோ நின்ால் ஆட்டோவை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினா்.
தகவல் அறிந்த மோகனூா் காவல் ஆய்வாளா் லட்சுமணதாஸ் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும், கூலிப்படையினா் விட்டுச்சென்ற சரக்கு ஆட்டோ, அதிலிருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனா்.
முதல்கட்ட விசாரணையில், பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை காரணமாக அருள்தாஸ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கூலிப் படையினரை தேடி வருகின்றனா்.