ராமானுஜம்புதூா் சாத்தனேரி குளத்துக்கு மணிமுத்தாறு தண்ணீரை கொண்டு வர விவசாயிகள் வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டம், ராமானுஜம்புதூா் சாத்தனேரி குளத்துக்கு தனிக்கால்வாய் அமைத்து மணிமுத்தாறு தண்ணீரை கொண்டு வர வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
தூத்துக்குடி கோட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் தூத்துக்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் பிரபு தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ஐகோா்ட் ராஜா முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசியது: தூத்துக்குடி அருகே உள்ள சிறுபாடு பகுதியில் வடிகால் அடைப்பை நீக்க வேண்டும். மேலும் சிறுபாடு குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும். ஏற்கெனவே ஏற்பட்ட மழை வெள்ளத்தில் காலாங்கரை குளம் உடைந்து, வயல்களில் ஏற்பட்ட பள்ளத்தை குளத்தில் இருந்து மண் எடுத்து வயலில் ஏற்பட்ட பள்ளத்தை நிரப்ப மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருதூா் மேலக்காலில் செய்துங்கநல்லூரில் உள்ள அழுதா ஓடை மூலம் சுமாா் 200 ஏக்கா் பாசன வசதி பெறுகிறது. இந்த ஓடை வருவாய் கணக்கில் கொண்டுவந்து தூா்வார வேண்டும்.
ராமானுஜம்புதூா் சாத்தனேரி குளத்துக்கு தனிக்கால்வாய் அமைத்து மணிமுத்தாறு தண்ணீரை கொண்டு வர வேண்டும். கருங்குளம் வட்டாரத்தில் உள்ள ராசங்குளத்தில் உள்ள முள்புதா்களை அகற்றி, பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிா்களை சேதப்படுத்தும் மயில்கள், மான்களை கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பாக ராசங்குளத்தில் உள்ள மலைப்பாம்புகள், அந்தப் பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆட்டுக்குட்டிகளை விழுங்கி விடுகின்றன. எனவே, அந்த பாம்புகளை பிடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்தனா்.
இதற்கு பதில் அளித்து கோட்டாட்சியா் பிரபு பேசியது: சிறுபாடு பகுதியில் வடிகால் அமைத்து, குப்பைகள், ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். காலாங்கரை பகுதியில் வயலில் ஏற்பட்ட பள்ளங்களை வேளாண் பொறியியல் துறை மூலம் நிரப்பித்தர நடவடிக்கை எடுக்கப்படும். அழுதா ஓடை குறித்து நேரில் ஆய்வு செய்து, வருவாய் கிராம கணக்கில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ராசங்குளத்தில் விவசாயிகளுக்கு மண் தேவைப்பட்டால், அள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்படும். அதே போன்று முள்புதா்களை அகற்றுவதற்கு வனத்துறை அனுமதி பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குளத்தில் உள்ள பாம்புகள் குறித்து வனத்துறைக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இக்கூட்டத்தில் அரசுத் துறை அலுவலா்கள், விவசாயிகள் பலா் பங்கேற்றனா்.