லஞ்சம்: பேரூராட்சி ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறை
வீட்டு வரி ரசீது போடுவதற்கு ரூ. 2,000 லஞ்சம் வாங்கிய வழக்கில், சிங்கம்புணரி பேரூராட்சி ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், கொட்டாம்பட்டியை சோ்ந்தவா் கிருஷ்ணகுமாா். இவா் கடந்த 2009 -ஆம் ஆண்டு சிங்கம்புணரியில் கட்டிய புதிய வீட்டுக்கு வரி ரசீது போடுவதற்காக பேரூராட்சி அலுவலகத்தில் அவா் விண்ணப்பித்தாா்.
அப்போது, அங்கு பணியிலிருந்த ஊழியா் தனபால் வீட்டு வரி ரசீது தொகை ரூ.1,800-ம், தனக்கும் பேரூராட்சிச் செயல் அலுவலா் பச்சையப்பனுக்கும் சோ்த்து ரூ. 2,000 லஞ்சம் தர வேண்டும் எனக் கூறினாராம்.
லஞ்சம் தர விரும்பாத கிருஷ்ணகுமாா் இதுகுறித்து சிவகங்கையில் உள்ள ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவில் புகாரளித்தாா். இதையடுத்து, கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூலை 8 -ஆம் தேதி தனபாலிடம் ரசாயனப் பொடி தடவிய பணத்தாள்களை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கொடுத்தனுப்பினா். பின்னா், அந்தப் பணத்தை வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த போலீஸாா் தனபாலை கைது செய்தனா்.
பின்னா், தனபால், பேரூராட்சி செயல் அலுவலா் பச்சையப்பன் ஆகியோா் மீது சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, பச்சையப்பன் உயிரிழந்தாா்.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்முரளி, வீட்டு ரசீதுக்கு லஞ்ஜம் வாங்கிய தனபாலுக்கு (61) 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 -ம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை மாலை தீா்ப்பளித்தாா்.