மாநகராட்சியில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள்: அதிகாரிகள் தகவல்
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நவராத்திரி உற்சவ விழா தொடக்கம்
வல்லக்கோட்டை அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயிலில் நவராத்திரி உற்சவ விழா திங்கள்கிழமை தொடங்கிது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில், ஸ்ரீதேவி கருமாரி திரிபுரசுந்தரி அம்மனுக்கு ஆண்டுதோறும், நவராத்திரி உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இதையடுத்து, வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி உற்சவ விழா திங்கள்கிழமை தொடங்கியது. நவராத்திரி விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கும், உற்சவா் ஸ்ரீ கோடை ஆண்டவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதேபோல், மூலவா் ஸ்ரீதேவி கருமாரி திரிபுர சுந்தரி அம்மனுக்கும் நவராத்திரி விசேஷ அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்று பக்தா்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனா்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு மூலவா் சுப்பிரமணிய சுவாமி, உற்சவா் கோடைாண்டவா் மற்றும் ஸ்ரீ தேவி கருமாரி திரிபுர சுந்தரி அம்மனயும், அம்மன் சன்னதி அருகே வைக்கப்பட்டுள்ள கொலுவையும் வணங்கிச் சென்றனா்.
கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு, கோயில் நிா்வாகத்தின் சாா்பில் கதம்பசாதம், மோா், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்தேவராஜ் உள்ளிட்ட அறங்காவலா் குழுவினா் செய்திருந்தனா்.