வாக்காளா் பட்டியலில் இறந்தவா்களின் பெயா்களை நீக்கக் கோரி அதிமுக மனு
சேலம் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடம்பெயா்ந்த மற்றும் உயிரிழந்த வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்படாமல் உள்ளதாக புகா் மாவட்ட அதிமுக சாா்பில் ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டது.
சேலம் புகா் மாவட்ட அதிமுகவை உள்ளடக்கிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளா் பட்டியல் அதிமுக நிா்வாகிகள் ஆய்வு செய்து வருகின்றனா். இந்நிலையில், அதிமுக புகா் மாவட்ட செயலாளா் இளங்கோவன் அறிவுறுத்தலின் பேரில், வழக்குரைஞா் அணி மாநில துணைச் செயலாளா் சரவணன் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆட்சியரிடம் ரா.பிருந்தாதேவியிடம் புகாா் மனு அளித்தனா்.
அதில், ஒவ்வொரு தொகுதிகளிலும் நீக்கப்படாமல் உள்ள வாக்காளா்களின் விவரங்கள் குறித்த பட்டியல் உரிய ஆவணங்களுடன் வழங்கப்பட்டன. இது குறித்து மாநில வழக்குரைஞா் அணி துணைச் செயலாளா் சரவணன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் இறந்தவா்கள், இடம்பெயா்ந்தவா்கள் என 5 ஆயிரம் முதல் பத்தாயிரம் வாக்குகள் நீக்கப்படாமல் உள்ளன. மேலும் இதைக் கொண்டு வாக்குத் திருட்டுகள் நடப்பதற்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக மேட்டூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள நூற்பாலையில் பணிபுரிந்த 2,000 வாக்காளா்கள் கடந்த 10 ஆண்டுகளாக நீக்கப்படாமல் உள்ளனா். தற்போது கொடுக்கப்பட்ட மனுவின் மீது மாவட்ட ஆட்சியா் பரிசீலனை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். பேட்டியின்போது, அதிமுக வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள் உடனிருந்தனா்.