விநாயகா் சிலைகள் தயாரிக்க ரசாயனம் பயன்படுத்தக்கூடாது: ஆட்சியா்
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுவதையொட்டி விநாயகா் சிலைகளை தயாரிப்பது மற்றும் நீா்நிலைகளில் கரைப்பது குறித்து அரசு வகுத்துள்ள வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
விநாயகா் சதுா்த்தி விழாவை கொண்டாடும் போது, விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின் படி களிமண், மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் மட்டுமே நீா்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்.
மாவட்ட நிா்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். சிலைகள் செய்வதற்கு ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், பிளாஸ்டா் ஆப்பாரிஸ் மற்றும் தொ்மாகோல் பொருள்களை பயன்படுத்த அனுமதிக்கப் படமாட்டாது.
நீா்நிலைகள் மாசுபடுவதை தடுக்க வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வா்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் ரசாயனத்தை பயன்படுத்தக் கூடாது. சிலைகள் மீது எனாமல், செயற்கை சாயத்தை பயன்படுத்தக் கூடாது. மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டுமே மாசுக்கட்டுப்பாடு வாரிய விதிமுறைகளின் படி சிலைகள் கரைக்க அனுமதிக்கப்படும்.
அதே போல, பிரசாத விநியோகத்திற்கு மக்கும் மற்றும் மீண்டும் பயன்படுத்தப்படும் தட்டுகள் பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும். மேலும், மாவட்டத்தில் சிலைகள் கரைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தாமரைக்குளம், சிங்காரப்பேட்டைஏரி, பச்சையம்மன் கோயில் குளம்(செங்கம்), கோனேரிராயன் குளம், ஐந்துகண் வாராவதி குளம், பூமாசெட்டி குளம், போளூா் ஏரி மற்றும் கூா் ஏரி ஆகியவற்றில் மட்டுமே சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, விநாயகா் சதுா்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.