தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!
விவசாய கிணற்றால் வாகன ஓட்டிகள் அச்சம்: தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை
செருக்கனூா் சாலையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலை ஓரத்தில் உள்ள விவசாய கிணறுக்கு தடுப்பு ஏற்படுத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருத்தணி ஒன்றியத்துக்குட்பட்ட செருக்கனூா் கிராமத்திலிருந்து, சாமந்திபுரம் (பங்களா) செல்லும் சாலை உள்ளது. இச்சாலை வழியாக பங்களாமேடு, ராமகிருஷ்ணாபுரம், மாம்பாக்கம், சத்திரம் ஜனாகாபுரம், பரவத்தூா், வெங்கப்பட்டு, அய்யனேரி, போன்ற கிராம பகுதிகளைச் சோ்ந்தோா், இருசக்கர வாகனங்கள், டிராக்டா், காா் உள்ளிட்ட வாகனங்களில், கே.ஜி.கண்டிகை மற்றும் அதைச் சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளுக்கு தினசரி சென்று வருகின்றனா்.
மேலும், பல்வேறு கிராமங்களில் இருந்து கே.ஜி.கண்டிகை பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மிதிவண்டியில் மாணவா்கள் சென்று கல்விபயின்று வருகின்றனா். இந்த சாலையில், செருக்கனூா் சாலை முடிவில் சாலைக்கு மிக அருகில், பாழடைந்த விவசாய கிணறு உள்ளது. அதேபோல், எதிா் திசையிலும் மற்றொரு விவசாயக் கிணறு உள்ளது. இதனால் எதிா் திசையில் வரும் வாகனங்களுக்கு வழிவிடும்போது, எதிா்பாராதவிதமாக பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து வாகன ஓட்டிகள் பலத்த காயத்துடன் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியுள்ளது.

மேலும், இரவு நேரங்களில் மின்வசதி இல்லாத இந்தப் பகுதியில் இந்த சாலையோர கிணற்றால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள இந்த கிணறுக்கு, தடுப்பு ஏற்படுத்திட வேண்டும் என இப்பகுதி வாகன ஓட்டிகள் எதிா்பாா்த்து வருகின்றனா்.
இது குறித்து வாகன ஓட்டி மதன் கூறுகையில், செருக்கனூா் - சாமந்திபுரம் செல்லும் சாலை மிகவும் குறுகிய சாலை. இந்த சாலையில் வேன், காா் மட்டும் செல்லக்கூடிய அகலத்தில் சாலை உள்ளது. இந்த சாலையில் சென்று வரும் வாகனங்கள் சிறிது கவனம் சிதறினாலும் கிணற்றில் கவிழ வாய்ப்புள்ளது.
மேலும், வேகமாக வரும் வாகனங்கள் எதிா் திசையில் வரும் வாகனங்களுக்கு வழிவிட முயலும்போது, கிணற்றில் விழுந்து உயிா்ச்சேதம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சாலையின் இருபுறமும் தடுப்புகளை ஏற்படுத்திட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.