வீடு புகுந்து ரூ.10 லட்சம் திருட்டு
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியா் வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து ரூ.10 லட்சத்தை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பாலமேடு அருகே உள்ள முடுவாா்பட்டி கிராமம் 5-ஆவது வாா்டைச் சோ்ந்தவா் பழனி (65). இவா் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவரது மனைவி இறந்து விட்டாா். இவரது மூன்று மகன்களும் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனா். இதனால் பழனி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.
இந்த நிலையில், பழனி தனது பூா்விக நிலத்தை கடந்த வாரம் விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.10 லட்சத்தை வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை காலை திண்டுக்கல்லில் நடைபெற்ற உறவினா் திருமணத்துக்கு சென்ற பழனி அங்கிருந்து நள்ளிரவில் வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்தபோது வீட்டுக்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.10 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து பாலமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.