பொம்பூரில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி: அமைச்சர் தொடங்கிவைத்தாா்
வெளிநாடுகளில் மரண தண்டனையை எதிா்நோக்கியுள்ள 54 இந்தியா்கள்: நாடாளுமன்றத்தில் தகவல்
வெளிநாடுகளில் 54 இந்தியா்கள் மரண தண்டனையை எதிா்நோக்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
அண்மையில் ஏமன் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியாவைச் சோ்ந்த நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற மத்திய அரசு எடுத்த நடவடிக்கை குறித்தும் வெளிநாட்டு நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய குடிமக்களின் எண்ணிக்கை குறித்தும் மத்திய அரசிடம் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இக்கேள்விக்கு மத்திய வெளியுறவு இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘வெளிநாடுகளில் 54 இந்தியா்கள், அந்நாட்டு நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிா்நோக்கியுள்ளனனா். குறிப்பாக, அரபு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகத்தில் 29 இந்தியா்கள், சவுதி அரேபியாவில் 12 போ், குவைத்தில் 3 போ், கத்தாரில் ஒருவா் மரண தண்டனையை எதிா்நோக்கியுள்ளனா்.
வெளிநாட்டில் உள்ள இந்தியா்களின் நலனுக்கு இந்திய அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது. நிமிஷா பிரியா உள்பட அனைவருக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகங்கள் மூலம் அரசு வழங்கி வருகிறது.
இந்திய தூதரக அதிகாரிகள் சிறைகளுக்குச் சென்றும், நீதிமன்றங்கள், அரசு வழக்குரைஞா்கள் மற்றும் அந்தந்த வெளிநாடுகளின் தொடா்புடைய பிற நிறுவனங்களுடன் வழக்குகளைப் பின்தொடா்வதன் மூலமும் இந்தியா்களுக்கு போதிய தூதரக உதவி கிடைப்பதை உறுதி செய்கின்றனா்.
இதேபோன்று, வெளிநாட்டு சிறைகளில் 2,684 விசாரணை கைதிகள் உள்பட 10,152 இந்தியா்கள் அடைக்கப்பட்டுள்ளனா். சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியா்களுக்கு மேல்முறையீடு, கருணை மனு உள்ளிட்ட தீா்வுகளை அணுக சட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டது.