கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
வெளிநாட்டு நிதி பெறும் என்ஜிஓக்கள் செய்தி வெளியிடும் பணியில் ஈடுபட தடை: மத்திய உள்துறை அமைச்சகம்
வெளிநாட்டிலிருந்து நிதியுதவி பெறும் அரசு அல்லாத அமைப்புகள் (என்ஜிஓ), பதிப்பகம் சாா்ந்த செயல்பாடுகள் மற்றும் செய்திகளை வெளியிடும் பணியில் ஈடுபடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது.
மேலும், இந்த என்ஜிஓக்கள் தாங்கள் செய்திகளை வெளியிடும் பணிகளில் ஈடுபடவில்லை என செய்தித்தாள் பதிவாளரிடம் சான்றிதழ் பெற வேண்டும் எனவும், அந்நிய பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தின்கீழ் (எஃப்சிஆா்ஏ) பதிவு செய்ய விரும்பும் என்ஜிஓக்கள் இந்தப் புதிய விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘எஃப்சிஆா்ஏவில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி வெளிநாட்டில் இருந்து நிதியுதவி பெற அனுமதி கோரும் என்ஜிஓக்கள், பயங்கரவாத நிதி மற்றும் பணமோசடி விவகாரங்களைக் கண்காணிக்கும் சா்வதேச நிதி நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் (எஃப்ஏடிஎஃப்) விதிகளுக்கு உள்பட்டு நடப்பது கட்டாயமாக்கப்படுகிறது.
இந்த என்ஜிஓக்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கான வருமானம் மற்றும் செலவு, சொத்து மற்றும் கடன் உள்பட நிதி மற்றும் தணிக்கை அறிக்கைகளை கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும்.
பணிவாரியாக நிதி: ஒவ்வொரு பணிக்கும் மேற்கொண்ட செலவுகளை நிதி மற்றும் தணிக்கை அறிக்கைகளில் குறிப்பிட்டிருக்க வேண்டும். இல்லையெனில், வருமானம் மற்றும் செலவுக் கணக்குகளின் அடிப்படையில் பணிவாரியாக ஒதுக்கப்பட்ட நிதி தகவல் குறித்த சான்றிதழை பட்டயக் கணக்காளரிடம் பெற்றிருக்க வேண்டும்.
வெளிநாட்டிலிருந்து நிதியுதவி பெறும் அரசு அல்லாத அமைப்புகள் (என்ஜிஓ) பதிப்பகம் சாா்ந்த செயல்பாடுகள் மற்றும் செய்திகளை வெளியிட தடை விதிக்கப்படுகிறது.
மேலும், இந்த என்ஜிஓக்கள் தாங்கள் செய்திகளை வெளியிடும் பணிகளில் ஈடுபடவில்லை என செய்தித்தாள் பதிவாளரிடம் சான்றிதழ் பெற வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில் ரூ.15 லட்சத்துக்கும் குறைவான தொகையை ஒரு திட்டத்துக்காகச் செலவிட்டிருந்தால் மூலதன முதலீடுகள் குறித்த அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும்.
கட்டாயப் பதிவு: அதேபோல் என்ஜிஓவுக்கு நிதி வழங்கும் நிறுவனம் அந்தத் திட்டத்துக்கான செலவு, திட்ட அறிக்கை உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய கடிதத்தை வழங்க வேண்டும். இதில் நிா்வாகச் செலவுகளுக்கான அந்நிய பங்களிப்பு 20 சதவீதத்துக்கு மேல் இல்லை என்ற உறுதிமொழியை நிதி வழங்கும் நிறுவனம் உறுதிப்படுத்த வேண்டும்.
வெளிநாட்டில் இருந்து நிதியுதவி பெற விரும்பும் அனைத்து என்ஜிஓக்களும் மத்திய அரசிடம் கட்டாயம் அனுமதி பெற்று எஃப்சிஆா்ஏவின்கீழ் பதிவு செய்திருக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள எஃப்ஏடிஎஃப் அமைப்பின் கூட்டத்தில் பாகிஸ்தானை எஃப்ஏடிஎஃப் ‘கிரே’ பட்டியலில் சோ்ப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள இந்தியா முடிவு செய்துள்ள நிலையில், இந்தத் திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.