ராணுவ வலிமை நாட்டின் மீது மரியாதையை உருவாக்கும்: ஆளுநா் ஆா்.என்.ரவி
வேன் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழப்பு
வேடசந்தூா் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுநா் உள்பட இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
தேனி மாவட்டம், பூசாரி கவுண்டன்பட்டியைச் சோ்ந்த திராட்சை விவசாயிகள் 22 போ், ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்துள்ள நாட்ராயன் கோயிலுக்கு ஆடி அமாவாசை வழிபாட்டுக்காக ஒரு வேனில் வியாழக்கிழமை அதிகாலை புறப்பட்டனா்.
திண்டுக்கல் கரூா் நான்கு வழிச் சாலையில் அய்யா்மடம் பகுதியில், தேநீா் குடிப்பதற்காக சாலையோரம் இருந்த கடை அருகே வேனை நிறுத்த முயன்றனா். அப்போது திருநெல்வேலியிலிருந்து கோலாப்பூா் நோக்கி சென்ற லாரி, வேன் மீது மோதி விபத்து நேரிட்டது.
இந்த விபத்தில் வேன் சாலையில் கவிழ்ந்தது. வேனின் இடிபாடுகளில் சிக்கி ஓட்டுநா் ரஞ்சித்குமாா் (37), விவசாயி வாசகா் (55) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
பலத்த காயமடைந்த மற்ற அனைவரும் வேடசந்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னா் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.
இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த வேடசந்தூா் போலீஸாா், லாரி ஓட்டுநரான நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையைச் சோ்ந்த சுரேஷ் (45) என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.