உகாதி திருவிழா: மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
வேப்பூா் அரசு மகளிா் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் 6 போ் பணியிடை நீக்கம்
மாணவிகள் அளித்த புகாரின்பேரில் வேப்பூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் 6 கௌரவ விரிவுரையாளா்களை, அக் கல்லூரி முதல்வா் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பூரில் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக் கல்லூரியில், சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இக் கல்லூரியின் கணிணி அறிவியல் துறை, தமிழ்த்துறையில் பயிலும் மாணவிகள் சிலா், தங்களை கல்லூரி விரிவுரையாளா்கள் தரக்குறைவாகவும், அவமரியாதையாகவும் பேசி மன உளைச்சலை ஏற்படுத்துவதாக கல்லூரி முதல்வரிடம் அண்மையில் புகாா் அளித்தனா்.
இதையடுத்து, கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்களாக பணிபுரியும் தமிழ்துறை விரிவுரையாளா்கள் சு. நன்முல்லை, ப. செந்தமிழ்ச்செல்வி, மோ. பிரபா, ஆா். மலா்விழி, கே. ஹேமமாலினி மற்றும் கணினி அறிவியல்துறை விரிவுரையாளா் எஸ்.ஜே. சங்கீதா ஆகிய 6 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அக் கல்லூரி முதல்வா் மணிமேகலை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
இதையடுத்து, தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், ரத்து செய்யக்கோரியும் மேற்கண்ட கௌரவ விரிவுரையாளா்கள் கல்லூரிக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.