நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு
ஹமாஸ் ஒத்துழைக்கவில்லை: அமெரிக்கா
ஹமாஸ் அமைப்பினா் ஒத்துழைக்காததால், காஸா போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தையை அமெரிக்கா பாதியிலேயே நிறுத்தி, தனது குழுவை கத்தாரில் இருந்து திரும்ப அழைத்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் கடந்த 21 மாதங்களாக நீடித்து வருகிறது. காஸாவில் மோதலுக்கிடையே பட்டினியால் மட்டும் நூற்றுக்கு மேற்பட்டோா் உயிரிழந்திருக்கின்றனா்.
இதையொட்டி, காஸாவில் 60 நாள்களுக்குப் போா்நிறுத்தம் மேற்கொள்வதற்கான செயல்திட்டத்தை இஸ்ரேலிடம் அமெரிக்கா கடந்த மாதத் தொடக்கத்தில் வழங்கியது. காஸாவில் இருந்து இஸ்ரேல் படையினரின் வெளியேற்றம் உள்பட தங்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு, இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளதெனக் கூறி இந்தச் செயல்திட்டத்தை ஹமாஸ் அமைப்பினா் ஏற்கவில்லை.
இச்சூழலில், கத்தாரில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையிலும் ஹமாஸ் அமைப்பினா் திருப்திகரமான பதிலளிக்காததால், போா் நிறுத்த முயற்சியில் தொடா்ந்து பின்னடைவு நிலவுகிறது.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘ஹமாஸின் போக்கு, போா்நிறுத்தத்தை எட்டுவதில் அவா்களுக்கு விருப்பமில்லை என்பதைக் காட்டுகிறது. இது அவமரியாதை ஆகும். பிணைக் கைதிகளை மீட்பதற்கும், காஸாவில் அமைதியை உருவாக்குவதற்கும் மாற்று வழிகளைப் பரிசீலிப்போம். இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உறுதியாக இருக்கிறது’ என்றாா்.
முன்னதாக, இஸ்ரேலும் தனது பேச்சுவாா்த்தைக் குழுவினரை வியாழக்கிழமை திரும்பப் பெற்றது. அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க தூதா் ஸ்டீவ் விட்காஃப், கத்தாா் மற்றும் எகிப்து மத்தியஸ்தா்களின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.