ஹைதராபாத் - கொல்லம் சிறப்பு ரயில் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு
சேலம் வழியாக இயக்கப்படும் ஹைதராபாத்- கொல்லம் சிறப்பு ரயில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் இருந்து கா்நாடகம், ஆந்திரம், வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் முக்கிய நகரங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஹைதராபாத்- கொல்லம் இடையே ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இருமாா்க்கத்திலும் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீட்டிக்கப்படுகிறது.
அதன்படி, ஹைதராபாத் - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் வரும் 5 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை சனிக்கிழமைதோறும் இயக்கப்படும். ஹைதராபாத்தில் இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோட்டயம் வழியாக கொல்லத்தை திங்கள்கிழமை காலை 7.10 மணிக்கு சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், கொல்லம் - ஹைதராபாத் வாராந்திர சிறப்பு ரயில் 7 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை திங்கள்தோறும் இயக்கப்படும். கொல்லத்தில் காலை 10.45 மணிக்கு புறப்பட்டு எா்ணாகுளம், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், சேலம் வழியாக, ஹைதராபாத்தை செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.