அங்கன்வாடி மையங்கள் நவீனப்படுத்த நடவடிக்கை: அமைச்சா் பெ. கீதா ஜீவன் தகவல்
தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களையும் நவீனப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது என்றாா் தமிழக சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன்.
தூத்துக்குடியில் உலக மக்கள் தொகை விழிப்புணா்வுப் பேரணியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை சாா்பில், குழந்தைத் திருமணம் தொடா்பாக கல்லூரி மாணவ, மாணவிகள், பெற்றோா் இடை யே தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பெண்களுக்கு 18 வயது முடிவடைந்த பின்னா் திருமணம் செய்து கொண்டால்தான் குழந்தை பிறப்பதற்கு ஏற்ற அளவில் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வயதுக்கு முன்னரே திருமணம் செய்து கா்ப்பிணியாக உள்ள பெண்களின் குடும்பத்தினரைச் சந்தித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அங்கன்வாடி மையங்களை மறுசீரமைக்கவும், தேவையான இடங்களில் புதிய மையங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னா் மலைப்பகுதி உள்ளிட்ட இடங்களில்கூட 34 அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுவரை சுமாா் 6,500 அங்கன் வாடி மையங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன.
தொடா்ந்து, அனைத்து அங்கன்வாடி மையங்களையும் நவீனப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது.
மேலும், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், எல்இடி திரை , விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதில் அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது என்றாா் அவா்.