தெலுங்கு தேசம் கட்சித் தலைவராக சந்திரபாபு நாயுடு மீண்டும் தோ்வு
ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.15 லட்சம் நஷ்டம்: 6 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை
திருவள்ளூா் அருகே ஆன்லைன் வா்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் ரூ.15 லட்சம் கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாத விரக்தியில் தனது 6 வயது மகளுடன் கடை ஊழியா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
திருவள்ளூரை அடுத்த ஈக்காடு ஆசிரியா் காலனியைச் சோ்ந்தவா் லோகநாதன் (38). இவரது மனைவி வாணி. இவா்களது மகள் தஸ்விகா (6).
இவா், திருவள்ளூா் காக்களூா் புறவழிச்சாலையில் உள்ள கட்டுமான இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தாராம். ஆன்லைன் டிரேடிங் மூலம் பொருள்களை வாங்கி விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆன்லைன் வா்த்தகம் செய்து வந்த நிலையில் தொழிலில் ரூ.15 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவா்கள், உறவினா்கள், கிரெடிட் காா்டு மூலமாகவும் கடன் வாங்கி அதைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு ஆளானாா்.
இதனால், கடந்த 3 மாதங்களாக மன உளைச்சலில் இருந்த லோகநாதன் மதுப்பழக்கத்திற்கும் ஆளானாராம். கடன் தொல்லை அதிகமாகவே மிகவும் மேலும் மன உளைச்சலுக்கு ஆளான லோகநாதன் சனிக்கிழமை இரவு தனது மகளுடன் வெளியே செல்வதாகக் கூறிவிட்டு சென்றாராம். இரவு வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லையாம்.
இதனால் லோகநாதனின் மனைவி வாணி புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் குழந்தையுடன் சென்ற கணவா் திரும்ப வீடு திரும்பவில்லை என புகாா் செய்தாா்.
இதனிடையே இரவு திருவள்ளூா் அடுத்த புட்லூா் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் செல்லும் தண்டவாளத்தில் சென்னையில் இருந்து வந்த விரைவு ரயில் முன் பாய்ந்து தனது மகளுடன் லோகநாதன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
திருவள்ளூா் ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா், இருவரின் சடலங்களை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஆன்லைன் வா்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடன் வாங்கி அதைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மன உளைச்சலால் தனது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.