இன்ஸ்டாவில் பாய் பிரண்டாக பழகி, மாணவியிடம் 60 சவரன் நகையை மோசடி செய்த தோழி..
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி அப்பகுதியில் ஒரு ஸ்கூலில் 12-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கல்லூரி படிப்புக்கு தயாராகி வருகிறார்.
அவரது தந்தை குளச்சல் பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். மாணவியின் தாய் பீரோவில் வைத்திருந்த நகைகளில் சுமார் 60 பவுன் நகைகள் மாயமாகியிருப்பதை சில நாள்களுக்கு முன் கண்டுபிடித்தார். இதுபற்றி மகளிடம் கேட்டதற்கு அவர் தனது இன்ஸ்டா காதலனுக்கு கொடுத்ததாக கூறி அழுதுள்ளார்.
இன்ஸ்டா காதலனை எங்கு சந்தித்து நகைகளை கொடுத்தாய் என தந்தை கேட்டுள்ளார். காதலனை நேரில் பார்த்ததில்லை எனவும், தோழி மூலம் நகைகளை கொடுத்தனுப்பியதாக அந்த மாணவி தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் பெற்றோர்கள் தோழியின் வீட்டுக்குச் சென்று காதலனைப்பற்றிய விபரங்களை கேட்டனர்.

அவர் அதற்கு சரியாக பதிலளிக்காததால் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் மாணவியின் பெற்றோர். போலீஸார் விசாரணை நடத்தியதில் மாணவியை ஏமாற்றி பணம் பறிப்பதற்காக தோழியே போலியாக இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் தொடங்கி ஆண் நண்பர் போன்று சாட் செய்து காதலிப்பதுபோன்று நடித்துள்ளதும். பின்னர், மாணவியிடம் இருந்து நகைகளை பறித்தது மோசடி செய்ததும் தெரியவந்தது. மேலும், போலீஸ் விசாரணைக்கு பயந்து தோழியும், தோழியின் தாயும் விஷம் குடித்தனர். அவர்கள் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி போலீஸார் கூறுகையில், "மாணவி 12-ம் வகுப்பு படித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த பெண் அவரது வகுப்புத்தோழியாக இருந்தார். மாணவியின் வீட்டினர் வசதியாக இருப்பதும், நிறைய நகைகள் வைத்திருப்பதையும் தோழி அறிந்துகொண்டார். மேலும், மாணவி வீட்டில் இருக்கும் சமயத்தில் மொபைல் போனில் இன்ஸ்டாகிராம் பார்க்கும் வழக்கம் உள்ளவர் என்பதையும் தெரிந்துகொண்டார்.
இதையடுத்து தனது தாயுன் உதவியுடன் ஆண் பெயரில் போலியாக இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கினார். கடந்த டிசம்பர் மாதம் முதல் அந்த போலி இன்ஸ்டா பேஜ் மூலம் மாணவியுடன் சாட் செய்யத்தொடங்கினார்.

மாணவியும் அது ஆண் என நினைத்து பழகியதுடன் காதலையும் வெளிப்படுத்தி உள்ளார். இதற்கிடையே தனக்கு பைக் வாங்க பணம் தேவைப்படுகிறது என கடந்த மார்ச் மாதம் கேட்டுள்ளார். அதற்கு வீட்டில் இருந்த நகைகளை எடுத்துத்தருவதாக மாணவி கூறியுள்ளார்.
நகைகளை எப்படி தருவது என மாணவி கேட்டதற்கு, 'உனது தோழியை எனக்கு தெரியும். அவரிடம் கொடுத்து அனுப்பு நான் வாங்கிக்கொள்கிறேன்' என சாட் மூலம் தெரிவித்துள்ளார். அந்த மாணவியும் தனது தோழியிடம் நகைகளை கொடுத்து அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து பல்வேறு காரணங்களைக்கூறி மாணவியிடம் இருந்து 60 சவரன் நகைகளை வாங்கி மோசடி செய்துள்ளார் தோழி. உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக பீரோவில் நகைகளை எடுத்துப் பார்த்தபோதுதான், 60 சவரன் நகைகள் மாயமாகியிருப்பது தெரியவந்தது.
இதுபற்றி மாணவி கூறிய தகவலின் அடிப்படையில், அவரது தந்தை தோழியிடம் கேட்டதற்கு, 'ஹெல்மெட் போட்டுக்கொண்டு வாலிபர் ஒருவர் தன்னிடம் நகைகளை வாங்கிச்சென்றதாக கூறியுள்ளார்.
ஆனால், காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் தோழியின் தந்தை சுமார் 15 சவரன் நகைகளை மாணவியின் தந்தையிடம் ஒப்படைத்துள்ளார். இந்த மோசடியில் மாணவியின் தோழியும், தோழியின் தாயும் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. தங்களின் கடன்களை அடைக்க மாணவியை பயன்படுத்தி பணம் கறக்க முயன்று இவ்வாறு செய்துள்ளனர்.
தோழியும், தாயும் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அவர்கள் வீடு திரும்பியதும் விசாரணை நடத்தி நகைகளை மீட்க நடவடிக்கை எடுப்போம்" என்றனர்.
கடனை அடைக்க போலி இன்ஸ்டாகிராம் மூலம் மாணவியிடம் நகை பறித்த தோழியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.