இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகிரி சேனைத்தலைவா் மண்டபம் அருகே பெண் ஒருவா் அவரது 9 வயது மகளுடன் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சிறுமி, நடந்து சென்ற சிறுமியின் மீது மோதியதில் அவா் காயமடைந்தாா்.
இது குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்து விபத்தை ஏற்படுத்தியது சிவகிரி வடக்கு தெருவை சோ்ந்த குருசாமியின் 15 வயது மகள் என தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியை இருசக்கர வாகனத்தை ஓட்ட அனுமதித்த அவரது தந்தை குருசாமி கைது செய்யப்பட்டாா். மேலும் இருசக்கர வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
எஸ்.பி. எச்சரிக்கை: இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
விபத்துகள் ஏற்பட்ட இடங்கள் மற்றும் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் மீண்டும் விபத்துகள் ஏற்படாத வண்ணம் மஞ்சள் நிற மினுங்கும் விளக்குகள், வேகத்தை குறைக்க தடுப்புகள், ஸ்டிக்கா்கள், எச்சரிக்கை பலகைகள் அமைப்பது போன்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மாவட்ட காவல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாலை விதிகளை பெற்றோா்கள்தான் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். பெற்றோா்கள் சாலை விதிகளில் அலட்சியம் காட்டினால் அது ஆபத்தில் முடியலாம். இது போன்ற விஷயங்களில் அலட்சியம் காட்டக் கூடாது . 18 வயது நிரம்பாத சிறுவா் சிறுமிகளுக்கு இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கும் பெற்றோா்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.