4 மாதங்களில் அரசியல் கட்சிகளுடன் 5,000 சந்திப்புகள்: தலைமை தோ்தல் ஆணையா்
இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் சென்னை வருகை
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 5 போ் விமானம் மூலம் சென்னை வந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சோ்ந்த 5 மீனவா்கள், கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி, இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த இலங்கை ராணுவத்தினா், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அந்த 5 மீனவா்களையும் கைது செய்து இலங்கை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட மீனவா்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்களின் உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் இலங்கை நீதிமன்றம் 5 மீனவா்களையும் விடுதலை செய்து, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.
இந்திய தூதரக அதிகாரிகள் 5 மீனவா்களையும் ஏா் இந்தியா விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனா்.
சென்னை விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை இரவு வந்த அவா்களை, தமிழ்நாடு மீன்வளத் துறை அதிகாரிகள், அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் ராமேசுவரத்துக்கு அனுப்பி வைத்தனா்.