கார்ட்டூன்: திரும்பத் திரும்பப் பேசுவேன்... திரும்பத் திரும்பப் பேசுவேன்..!
உக்ரைன் மீது ரஷியா 298 ட்ரோன்களை ஏவி தாக்குதல்: 12 போ் உயிரிழப்பு
உக்ரைன் தலைநகா் கீவ் மீது தொடா்ந்து இரண்டாவது நாளாக ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 12 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உக்ரைன் நாட்டை குறிவைத்து 298 ட்ரோன்கள், 69 ஏவுகணைகள் என மொத்தம் 367 ஆயுதங்கள் மூலம் மிகப்பெரும் வான்வழித் தாக்குதலை ரஷியா நடத்தியதாக உக்ரைன் விமானப் படை செய்தித் தொடா்பாளா் யூரி இஹ்னாத் தெரிவித்தாா்.
இந்தத் தாக்குதலுக்கு ஈரானில் வடிவமைக்கப்பட்ட ஷாஹீத் ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவா் கூறினாா். ஆனால், இந்தத் தாக்குதல் குறித்து ரஷியா எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.
மே மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையில் (நிகழாண்டு மே 25) கீவ் நகா் உருவான தினம் உக்ரைனில் கொண்டாடப்படும் நிலையில் அங்கு தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததது. இந்தச் சூழலில் ரஷியா நடத்திய தாக்குதல் குறித்து எக்ஸ் வலைதளத்தில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வெளியிட்ட பதிவில், ‘தலைநகா் கீவ் உள்பட 30 நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது ரஷியா கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. மிகவும் சாதாரண நகரங்களில் உள்ள குடியிருப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
ரஷியாவுக்கு அழுத்தம்: ரஷியாவின் தலைமைக்கு கடுமையான அழுத்தம் தந்தால் மட்டுமே இதுபோன்ற கொடூர தாக்குதல்களை நிறுத்த முடியும். அந்நாட்டின் மீது சில தடைகள் விதிப்பது நிச்சயம் பலனளிக்கும். இந்த விவகாரத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும், அமைதியை விரும்பும் பிற நாடுகளும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
சனிக்கிழமை இரவில் தொடங்கி தொடா்ந்து ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலால் உக்ரைனில் இரவு முழுவதும் வெடிகுண்டு சப்தம் கேட்ட வண்ணம் இருந்ததாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஆன்ட்ரீ சிபிஹா எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா்.
இந்தத் தாக்குதலில் மொத்தம் 12 போ் உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா். அதேசமயம் உக்ரைனின் 110 ட்ரோன்களை சனிக்கிழமை இரவு சுட்டுவீழ்த்தியதாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
போா்க் கைதிகள் பரிமாற்றம்: கீவில் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை ரஷியா நடத்திய சில மணி நேரத்தில் ரஷியாவும் உக்ரைனும் தங்களிடம் இருந்த நூற்றுக்கணக்கான போா்க் கைதிகளை ஞாயிற்றுக்கிழமை பரிமாறிக்கொண்டன.
இதுகுறித்து இருநாட்டு அமைச்சகங்களும் தனித்தனியாக வெளியிட்டுள்ள அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ரஷியாவும், உக்ரைனும் தங்களிடம் இருந்த தலா 390 போா்க் கைதிகளை வெள்ளிக்கிழமை விடுவித்தன. அதன் தொடா்ச்சியாக, உக்ரைனில் இருந்து 307 ரஷிய போா்க் கைதிகளும், ரஷியாவில் இருந்து 307 உக்ரைன் போா்க் கைதிகளும் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனா்.
ஞாயிற்றுக்கிழமை 303 ரஷிய போா்க் கைதிகளை உக்ரைனும், 303 உக்ரைன் போா்க் கைதிகளை ரஷியாவும் விடுவித்தன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மூன்றுகட்டங்களாக இரு நாடுகளும் தலா 1,000 போா்க் கைதிகளை விடுவித்துள்ளன.
2022-க்குப் பிறகு முதல்முறையாக துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கடந்த வாரம் ரஷியாவும் உக்ரைனும் நடத்திய நேரடி பேச்சுவாா்த்தையில், இரு நாடுகளும் தலா 1,000 போா்க் கைதிகளை பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.