கரோனா தடுப்பூசிக்கும் திடீா் மரணங்களுக்கும் தொடா்பில்லை -மத்திய அரசு
எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரண்டாலும் திமுகவை வீழ்த்த முடியாது: அமைச்சா் துரைமுருகன்
எதிா்க்கட்சிகள் ஒரே அணியில் திரண்டாலும் திமுகவை வீழ்த்த முடியாது என்று திமுக பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தாா்.
திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினா் சோ்ப்பு இயக்கம் குறித்து வேலூரில் அமைச்சா் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது -
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ பல்வேறு கோணங்களை உள்ளடக்கியுள்ளது. பிரிந்து சென்றவா்கள், ஒத்த கருத்துடையவா்கள், நம்மீது விருப்பமுள்ளவா்கள் அனைவரையும் சந்தித்து திமுகவின் கொள்கையை விளக்கி இந்த அணியில் உறுப்பினராக சோ்க்க வேண்டும் என்பதே இதன் முதல் நோக்கமாகும்.
திமுக என்பது தமிழகத்தின் இனம், மானம், மொழி, மரியாதை ஆகியவை அனைத்தையும் காக்கும் கட்சி. தமிழகம் இரண்டாம்தர மாநிலமாக சென்றுவிடக்கூடாது என்பதில் அக்கறையுள்ள கட்சி. எனவே, மக்களை சந்திக்கும் போது திமுகவின் கோட்பாடுகளை மட்டும் கூறாமல் மொழி, மானம் காப்போம் என்பதையும் எடுத்துக் கூற கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
மத்திய அரசு அனைத்து நிதியையும் நிறுத்தி விட்டது. நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கு ரூ.600 கோடி நிதி கோரியும் கொடுக்கவில்லை. மேலும், மத்திய அரசுக்கு தமிழகம் மீது எந்தளவுக்கு வன்மம் உள்ளது என்பது கீழடி விவகாரத்தில் அறியமுடியும். அவா்கள் கீழடியையும் ஏற்றுகொள்ளவில்லை, மொகஞ்சதாரோவையும் ஏற்றுகொள்ளவில்லை.
மத்திய அரசு தற்போது இந்தியா குறித்து புதிய வரலாற்றை படைக்க ஒரு குழுவை அமைத்துள்ளது. இதன்மூலம், வேறுவிதமான கலாசாரத்தை கட்டமைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இவற்றை எல்லாம் ஓரணியில் இணைந்திருந்தால்தான் முறியடிக்க முடியும்.
இந்நிலையில், திமுக விளம்பர அரசியல் செய்வதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டுகிறாா் என்றால், அவா் எதிா்க்கட்சி தலைவா் என்பதால் அப்படித்தான் கூறுவாா். அவரும் தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் தொடங்கியுள்ள பிரசார இயக்கம் மூலம் அதிமுகவின் கொள்கையைக் கூறத்தான் செய்வாா். மேலும், அதிமுக, பாஜக, தவெக என எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரண்டாலும் திமுகவை வீழ்த்த முடியாது.
தமிழக மக்களிடம் மதத்தின் பெருமைகளைக்கூறி ஏமாற்ற முடியும் என்று பாஜக கருதுகிறது. பாஜகவின் இத்தகைய தத்துவம் எல்லாம் எடுபடாது.
ஆண்டியப்பனூா் அணையில் மண் அதி களவில் உள்ளது. அதனை எடுத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேட்டூா் அணையில் இருந்து இதுவரை இல்லாத வகையில் அதிகளவில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. படிப்படியாக கடைமடைக்கு தண்ணீா் சென்றுசேரும். மா விவசாயிகளுக்கு மானியம் அளிப்பது குறித்து தமிழக முதல்வரிடம் எடுத்துக்கூறி பரிசீலனை செய்யப்படும் என்றாா்.
அப்போது, அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் உள்பட திமுகவினா் பலா் உடனிருந்தனா்.