ஏர் இந்திய விமானத்தில் கரப்பான் பூச்சித்தொல்லை; விமானத்தை நிறுத்தி மருந்தடித்த ஊழியர்கள்!
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பைக்கு இன்று ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. அந்த விமானம் இந்தியாவை நெருங்கியபோது விமானத்தில் கரப்பான் பூச்சி ஆங்காங்கே ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது.
இரண்டு பயணிகள் மீது கரப்பான் பூச்சி ஊர்ந்து சென்றது. உடனே அவர்கள் இது குறித்து விமான சிப்பந்திகளிடம் புகார் செய்தனர். இதையடுத்து அந்தப் பயணிகள் இரண்டு பேரையும் அந்த இருக்கையிலிருந்து வேறு இருக்கையில் இடம் மாறி அமரச் செய்தனர்.
விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது. அந்நேரம் ஏர் இந்தியா ஊழியர்கள் விமானத்தில் வேறு ஏதாவது பூச்சிகள் இருந்தால் அதனை அப்புறப்படுத்தும் விதமாக விமானம் முழுக்க முழு அளவில் சுத்தம் செய்தனர்.

சுத்தம் செய்யப்பட்ட பிறகு விமானம் தாமதம் இன்றி புறப்பட்டுச் சென்றது. இச்சம்பவத்தால் பயணிகள் மத்தியில் ஒரு வித சலசலப்பு ஏற்பட்டது. விமானத்தில் கரப்பான் பூச்சி புகுந்ததை ஏர் இந்தியா நிர்வாகமும் ஒப்புக்கொண்டுள்ளது.
விமானம் தரையில் நிற்கும்போது எதாவது ஒரு வழியில் பூச்சிகள் உள்ளே வந்து விடுகின்றன என்றும், நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்றும் ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நீண்ட தூர ரயில்களில்தான் கரப்பான் பூச்சித்தொல்லை அதிகமாகக் காணப்படுவது வழக்கம். இப்போது விமானத்திலும் கரப்பான் பூச்சித்தொல்லை ஆரம்பித்து இருக்கிறது.
அகமதாபாத்தில் சமீபத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஏர் இந்தியா விமானங்கள் பாதுகாப்பு சர்ச்சைக்கு ஆளாகி வருகிறது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் அடிக்கடி நிறுத்தப்படுவது அல்லது தாமதமாகப் புறப்படுவது போன்ற பல்வேறு பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கிறது.