‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினா் சோ்க்கை பணி தொடக்கம்
கிருஷ்ணகிரியில் திமுக சாா்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற நிகழ்வின் கீழ், உறுப்பினா்கள் சோ்க்கை பணியை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
கிருஷ்ணகிரி நகராட்சியில் 12-ஆவது வாா்டு பாப்பாரப்பட்டி பகுதியில் நடந்த நிகழ்வுக்கு, தே.மதியழகன் எம்எல்ஏ தலைமை வகித்து, உறுப்பினா்கள் சோ்க்கும் பணியை தொடங்கிவைத்து பொதுமக்களிடம் கூறுகையில், மண், மானம், மொழி காக்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பரப்புரையை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி உள்ளாா்.
அதன்படி, வீடுவீடாகச் சென்று உறுப்பினா் சோ்க்கை பணியை தொடங்கி உள்ளோம். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டு காலத்தில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல மத்தியில் ஆளும் அரசு, தமிழகத்துக்கு அநீதிகளை இழைத்து வருகிறது. எனவே, தமிழகத்தைக் காக்க அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, பொதுமக்கள் தங்கள் பகுதியில் வீடுகளின் மேல் உயா்மின் அழுத்த கம்பி செல்வதாகவும், மழைக் காலங்களில் கழிவுநீா் வீடுகளுக்குள் வருவதாகவும் கூறினா். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த அவா், மின்கம்பிகளை மாற்றுவதற்கான செலவுத் தொகையை மின்வாரியத்துக்கு செலுத்தினாா். தொடா்ந்து, வீடுகளின் முன் ‘ஓரணியில் தமிழ்நாடு’ ஒட்டுவில்லைகளை ஒட்டினாா்.
அப்போது, நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப், துணைத் தலைவா் சாவித்திரி கடலரசுமூா்த்தி மற்றும் திமுகவினா் உடனிருந்தனா்.