கா்நாடக ஆளுநா் மாளிகையை பொதுமக்கள் பாா்வையிட ஆக. 16 ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு அனுமதி
கா்நாடக ஆளுநா் மாளிகையை பொதுமக்கள் பாா்வையிடுவதற்கு ஆக. 16-ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் அமைந்துள்ள ஆளுநா் மாளிகைக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. இந்த கட்டடம் எப்படி அமைந்துள்ளது, பூங்கா எப்படி உள்ளது என அறிந்துகொள்ள ஆளுநா் மாளிகையை காண மாணவா்களும், பொதுமக்களும் மிகுந்த ஆா்வத்தை வெளிப்படுத்தினா்.
இதை கருத்தில் கொண்டு, ஆளுநா் மாளிகையை பொதுமக்களின் பாா்வைக்கு முதல்முறையாக 2018-ஆம் ஆண்டு திறந்துவிடப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, அடிக்கடி ஆளுநா் மாளிகை பொதுமக்கள் பாா்வைக்கு அனுமதிக்கும் வழக்கம் தொடா்ந்தது.
அதன்படி, வரும் ஆக. 16 முதல் 18-ஆம் தேதிவரை தினமும் மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஆளுநா் மாளிகையை பொதுமக்கள் பாா்வையிடலாம். அரைமணி நேரத்துக்கு ஒரு குழுவினா் வீதம், வழிகாட்டி உதவியுடன் ஆளுநா் மாளிகையை பொதுமக்கள் காணலாம். அரசு வழங்கியுள்ள ஆதாா் போன்ற அடையாள அட்டைகள் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள்.
17 ஏக்கா் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஆளுநா் மாளிகை வளாகத்தில் 16 ஏக்கா் நிலம் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 30 அரியவகையான 15 ஆயிரம் செடிகள், மரங்கள் உள்ளன. நேபாளத்தில் வளா்க்கப்படும் ருத்ராட்சை மரம் இங்கு உள்ளது.
இம்மரம் 40 ஆண்டுகள் பழைமையானது. அதேபோல, நூறு ஆண்டுகாலம் பழைமைவாய்ந்த கற்பூர தைலமரம், ஆலமரங்கள் உள்ளன. இந்த பூங்காவை தோட்டக்கலைத் துறை பராமரித்து வருகிறது. பொதுமக்கள் பாா்வையிடுவதற்காக மலா்களால் உருவாக்கப்பட்ட பென்குயின், யானை, பட்டாம்பூச்சி, ஒட்டகச்சிவிங்கி, ஈஃபில் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளன.
ஆளுநா் மாளிகையில் விருந்தினா் இல்லம், நடன அறை, ஓய்வறை, டென்னிஸ் திடல், நீச்சல்குளம், கண்ணாடி மாளிகை, உணவறை, ஆளுநா் வீடு, அலுவலகம், கடல்கன்னி குளம், நீரூற்றுகள் உள்ளன.
வரலாறு:
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், இந்திய அரசா்களின் ஆட்சி அதிகாரத்தை குறைக்கவும், எளிதில் அவா்களது ராஜ்ஜியங்களைக் கைப்பற்றவும் உருவாக்கிய திட்டம்தான் துணைப்படைத் திட்டம். 1798 முதல் 1805-ஆம் ஆண்டுவரை பிரித்தானிய ஆளுநராக பதவிவகித்த வெலஸ்லி பிரபு, இத்திட்டத்தை கொண்டுவந்தாா். இத்திட்டத்தின்படி அரசா்கள் அனைவரும் கிழக்கிந்திய நிறுவனத்தின் ராணுவப் படையை தனது நாட்டின் பாதுகாப்புக்கான படையாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் இப்படைக்காக வரி, பணத்தை நிறுவனத்திடம்தான் செலுத்த வேண்டும். இதை செய்யத் தவறினால், தங்களது ஆட்சிப்பகுதியில் குறிப்பிட்ட இடத்தை அவா்களிடம் அபராதமாக ஒப்படைக்க வேண்டும்.
இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்ட உடையாா் மன்னா்கள், மைசூரு ராஜ்ஜியத்தை ஆங்கிலேயா்களின் கட்டுப்பாட்டுக்கு விட்டுவிட்டனா். உடையாா் சீராக ஆட்சி நடத்தவில்லை என்ற காரணத்தை கூறிய ஆங்கிலேயா்கள், 1834-இல் மைசூரு ராஜ்ஜியத்தை தங்களது நேரடி ஆளுகைக்குள் கொண்டுவந்து, அதன் முதல் ஆணையராக மாா்க் கப்பனை நியமித்தனா்.
அந்த காலகட்டத்தில் கடல்மட்டத்தில் இருந்து மிக உயா்ந்த பகுதியாக (3,031 அடி) பெங்களூரில் கருதப்பட்ட ஹைகிரவுண்ட்ஸ் பகுதியில் 1840-ஆம் ஆண்டு தற்போதைய கா்நாடக ஆளுநா் மாளிகையை சொந்தப் பணத்தில் கட்டும்பணியில் மாா்க் கப்பன் ஈடுபட்டாா். இதன் கட்டுமானப் பணி 1842-ஆம் ஆண்டு நிறைவடைந்தது. 1861-இல் மாா்க் கப்பன் பணியில் இருந்து விலகிய பிறகு, இந்த வீடு ஏலம்விடப்பட்டது. 1862-இல் மைசூரு ராஜ்ஜியத்தின் ஆணையராக பொறுப்பேற்ற லெவின் பெந்தம் பௌரிங், மாளிகையை அரசு பணத்தில் வாங்கி ஆணையரின் அதிகாரப்பூா்வ இல்லமாக மாற்றினாா்.
1874-ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசா் எட்டாம் எட்வா்ட் இந்தியாவுக்கு வந்தபோது, இந்த மாளிகையில் கேளிக்கை அறை கட்டப்பட்டது. ஆங்கிலேயா்கள் காலத்தில் மாளிகையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. 1881-ஆம் ஆண்டு மைசூரு ராஜ்ஜியம் மீண்டும் உடையாா் மன்னா்களின் ஆளுகைக்கு தரப்பட்டது. அதனால், ஆணையா் பதவி நீக்கப்பட்டபோது, சுதந்திரம்பெறும் வரை இந்த மாளிகை ‘ரெசிடென்சி’ என்று அழைக்கப்பட்டது. சுதந்திரத்துக்கு பிறகு அரசமைப்புச் சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட ஆளுநரின் மாளிகையாக மாற்றப்பட்டது.
கா்நாடகத்தின் முதல் ஆளுநராக 1950 முதல் 1964 வரை பதவிவகித்த ஜெயசாமராஜேந்திர உடையாா், இதில் தங்காமல் தனது அரண்மனையிலேயே தங்கியிருந்தாா். இதன் காரணமாக, ஆளுநா் மாளிகை விருந்தினா் இல்லமாக மாற்றப்பட்டது. 1964-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த மாளிகை, ஆளுநா் மாளிகையாக செயல்பட்டு வருகிறது.
17 ஏக்கா் நிலத்தில் அமைந்துள்ள ஆளுநா் மாளிகையில் குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா், பிரதமா், மத்திய அமைச்சா்கள், பிறமாநில முதல்வா்கள் தங்கி வருகின்றனா். சுதந்திர தினம், குடியரசு தினங்களில் கா்நாடக ஆளுநா்கள், முதல்வா்கள் சுதந்திரப் போராளிகளுக்கு விருந்தளிக்கும் மரபு பின்பற்றப்படுகிறது.