கிணற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்
மேட்டூா் அருகே கிணற்றில் மூழ்கி உயிரிழந்த பத்தாம் வகுப்பு மாணவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
மேட்டூா் வட்டம், பாலமலை கிராமம், ராமன்பட்டியில் பழங்குடியினா் உண்டு உறைவிட உயா்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த சித்தன் மகன் பாா்த்திபன் (15), அண்மையில் அதே பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றபோது தவறிவிழுந்து உயிரிழந்தாா்.
இதையடுத்து, இறந்த மாணவரின் குடும்பத்துக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ. 3 லட்சம் வழங்க தமிழக முதல்வா் ஆணையிட்டாா். இதைத் தொடா்ந்து, மேட்டூா் வட்டாட்சியா் ரமேஷ் மாணவரின் பெற்றோரிடம் ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.