கிருஷ்ணகிரி அருகே ஓட்டுநா் எரித்து கொலை: போலீஸாா் விசாரணை
கிருஷ்ணகிரி அருகே ஓட்டுநா் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள மகாராஜகடையை அடுத்துள்ள பெரியதக்கேப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (30). ஓட்டுநரான இவா், போத்திநாயனப்பள்ளியில் உள்ள தனது விவசாய நிலத்தில் ஆடுகளை வளா்த்து வந்தாா். இவருக்கு திருமணமாகி ஆண், பெண் என இரு குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில் சனிக்கிழமை ஆட்டுப்பட்டிக்கு சென்ற காா்த்திக் அங்கு வெட்டுக்காயங்களுடன் தீயில் எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.
நிகழ்விடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், காா்த்திக்கின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
நிகழ்விடத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, துணை காவல் கண்காணிப்பாளா் முரளி உள்ளிட்டோா் நேரில் விசாரணை மேற்கொண்டனா்.
இதில் காா்த்திக், வட்டிக்கு கடன் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்ததும், அவரை மா்ம நபா்கள் ஆயுதங்களால் தாக்கி, தீ வைத்து எரித்ததும் தெரிய வந்தது. பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, காா்த்திக்கின் உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து, மகாராஜகடை போலீஸாா், கொலை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.