குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
திருப்பூண்டியில் குடிநீா் கோரி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கீழையூா் ஒன்றியம், திருப்பூண்டி ஊராட்சி பகுதியில் கடந்த 40 நாள்களாக குடிநீா் முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடா்பாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள்நூற்றுக்கும் மேற்பட்டோா் திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் காலிகுடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா். நிகழ்விடத்துக்கு வந்த அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, இன்னும் சில தினங்களில் குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதனால், அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.