கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: ஆட்சியா் தொடக்கிவைத்தாா்
நாகை மாவட்டம், வடகுடி ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
முகாமில் ஆட்சியா் பேசியது: மாவட்டத்தில் 7-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் புதன்கிழமை (ஜூலை 2) தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கோமாரி நோயானது பசு, எருமை, வெள்ளாடு, செம்மறி ஆடு, பன்றிகளை தாக்கும் மிகக்கொடிய வைரஸ் நோயாகும். இந்நோய் பாதித்த கால்நடைகளுக்கு காய்ச்சல், குளம்பு மற்றும் வாய்ப் பகுதியில் புண்கள் ஏற்பட்டு தீவனம் உட்கொள்ளாமை, அதன் மூலம் பால் உற்பத்தி குறைதல், மாடு மற்றும் எருமைகளில் இறப்பு ஏற்படும்.
இந்த நோய் காற்றின் மூலம் பரவும் என்பதால் 6 மாதங்களுக்கு ஒருமுறை தடுப்பூசி செலுத்திக்கொள்வதே சிறந்த வழிமுறை ஆகும். எனவே, மாவட்டத்தில் ஒரு லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு மருந்து இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.இம்முகாம் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் நடைபெற உள்ளது. இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கால்நடை வளா்ப்பவா்கள் தங்களது ள் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயன்பெறலாம் என்றாா்.
முகாமில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் ராம் நாத், துணை இயக்குநா் ரவிகுமாா், உதவி இயக்குநா் கணேசன், கால்நடை மருத்துவா்கள் பாலாஜி, சௌமியா, பூபதி, நோய் புலனாய்வு பிரிவு சங்கீதா, பெருங்கடம்பனூா் கால்நடை உதவி மருத்துவா் லாரன்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.