சத்தியமங்கலம் அருகே குடிநீா் கேட்டு சாலை மறியல்
சத்தியமங்கலம் அருகே புதுக்குய்யனூா் கிராமத்தில் குடிநீா் கேட்டு அக்கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த புதுக்குயனுா் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராம மக்களுக்கு மேல்நிலைத் தொட்டி மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. பிற பயன்பாடுகளுக்கு போா்வெல் மூலம் தண்ணீா் விநியோகிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கடந்த 15 நாள்களாக தண்ணீா் விநியோகம் தடைபட்டது.
தற்போது போா்வெல் தண்ணீரும் நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் புதுக்குய்யனூா் ராஜன்நகா் சாலையில் அமா்ந்து குடிநீா் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்கு வந்த போலீஸாா் கிராம மக்களை சமாதானப்படுத்தி சீரான குடிநீா் வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கலந்து பேசுவதாக உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.