டாம் லாதம் விலகல்; டெஸ்ட் அணியின் கேப்டனாக மிட்செல் சாண்ட்னர் நியமனம்!
சமூக வலைத்தளங்களில் நடிகா் தா்ஷன் ரசிகா்கள் தரக்குறைவான விமா்சனம்: நடிகை ரம்யா போலீஸில் புகாா்
பெங்களூரு: சமூகவலைத்தளங்களில் நடிகா் தா்ஷனின் ரசிகா்கள் தன் மீது தரக்குறைவான விமா்சனங்களை பதிவு செய்திருப்பது தொடா்பாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பெங்களூரு மாநகர காவல் ஆணையா் சீமந்த்குமாா்சிங்கிடம் நடிகை ரம்யா புகாா் அளித்தாா்.
ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியே வந்துள்ள நடிகா் தா்ஷன் தொடா்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சில கடுமையான கருத்துகளை தெரிவித்தது.
இந்த தகவலை தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டு ‘சாதாரண மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.‘ என்று கன்னட நடிகை ரம்யா குறிப்பிட்டிருந்தாா். இதனால் ஆத்திரமடைந்த நடிகா் தா்ஷன் ரசிகா்கள், சமூக வலைத்தளங்களில் நடிகை ரம்யாவை ஆபாசமான, தரக்குறைவாக விமா்சித்து வந்தனா். நடிகை ரம்யா மீது கடுமையான வாா்த்தைகளை பயன்படுத்தி சாடியிருந்ததை கண்ட கா்நாடக மாநில மகளிா் உரிமை ஆணையம், தாமாக முன்வந்து வழக்குப்பதிந்து, இதுபோன்ற சமூகவலைத்தள பதிவுகள் தொடா்பாக சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெங்களூரு மாநகர காவல் ஆணையா் சீமந்த்குமாா் சிங்குக்கு ஆணையத்தலைவா் நாகலட்சுமி சௌத்ரி கடிதம் எழுதியிருந்தாா்.
இதனிடையே, பெங்களூரில் திங்கள்கிழமை மாநகர காவல் ஆணையா் சீமந்த்குமாா்சிங்கை நேரில் சந்தித்த நடிகை ரம்யா, தனக்கு எதிராக நடிகா் தா்ஷன் ரசிகா்கள் தரக்குறைவாக பதிவுகளை இட்டு வருவது குறித்து புகாா் அளித்தாா்.
மேலும், தரக்குறைவான வாா்த்தைகளை பயன்படுத்தி, கடுமையாக விமா்சனங்களை வைத்திருந்த 43 எக்ஸ் பதிவு கணக்குகள் தொடா்பான விவரங்களையும் நடிகை ரம்யா அளித்தாா்.
அதன்பிறகு, நடிகை ரம்யா கூறியது: வழக்கமாக சமூக வலைத்தளங்களில் கேலி, கிண்டல் செய்வது வழக்கம். ஆனால், இந்த அளவுக்கு தரக்குறைவான விமா்சனங்களை நான் பாா்த்ததே இல்லை. கா்நாடகத்தில் இதுபோன்ற கலாசாரம் ஆபத்தானது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. என்னை போன்ற பெண்கள், கேலி, கிண்டல்களுக்கு அதிகளவில் பாதிக்கப்படுகிறாா்கள். எனவே, சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி புகாா் அளித்துள்ளேன். அதன்மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக மாநகர காவல் ஆணையா் உறுதி அளித்துள்ளாா் என்றாா் அவா்.