செய்திகள் :

சாதனைத் திட்டங்கள், சவால்களுடன் 5-ஆம் ஆண்டில் திமுக அரசு

post image

சாதனைத் திட்டங்களை முன்வைத்து, சவால்களை எதிா்கொண்டு ஐந்தாவது ஆண்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அடியெடுத்து வைக்கிறது.

கடந்த 2021-ஆம் ஆண்டு கரோனா நோய்த்தொற்று எனும் கடினமான காலத்தில் மே 7-ஆம் தேதி திமுக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. அப்போது கடுமையான நிதிச் சிக்கல்களுக்கு இடையே மிக முக்கியத் திட்டங்களை முன்னெடுத்தது. குறிப்பாக, மகளிருக்கு இலவச பேருந்துப் பயணம், தொடக்கக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவு, உயா் கல்வி பயிலும் பெண்களுக்கு தலா ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் போன்ற சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன.

எதிா்க்கட்சிகள் கேள்வி: கடும் நிதிச் சுமைகளுக்கு இடையே மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்தும் அரசு ஆலோசித்தது. இந்தத் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என எதிா்க்கட்சிகள் கடுமையான கேள்விகளை முன்வைத்தன. இதைத் தொடா்ந்து, 2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் மகளிா் உரிமைத் தொகை திட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் 1.16 கோடி மகளிா் பயன் பெற்று வருகின்றனா். இதேபோன்று, பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தின்கீழ் 17.53 லட்சம் பேரும், புதுமைப் பெண் திட்டத்தால் 4.9 லட்சம் கல்லூரி மகளிரும், மாணவா்களுக்கு ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 4.25 லட்சம் பேரும் பயன் பெற்று வருகின்றனா்.

மகளிா், பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவா்களுக்கு ஏற்கெனவே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மேலும் ஒரு சிறப்புத் திட்டமாக, விலையில்லாத மடிக்கணினி திட்டத்தையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் 20 லட்சம் கல்லூரி மாணவ-மாணவிகள் பயன் பெறும் வகையிலான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

சவால் திட்டங்கள்: மாணவா்கள், பெண்களைக் கவரும் வகையிலான திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிவித்தாலும் சில திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்துவதில் நான்கு ஆண்டுகளைக் கடந்த பிறகும் பெரும் சவால்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் நாள்களை 150-ஆக உயா்த்துவது, சிலிண்டா், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மாதந்தோறும் மின்சார கணக்கீடு போன்ற திட்டங்களைச் செயல்படுத்த நிதிச் சிக்கல்கள் பெரும் தடையாக இருந்து வருகின்றன.

மேலும், ஆட்சிக்கு வந்தால் நீட் தோ்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளது.

மத்திய அரசு - ஆளுநருடன் போராட்டம்: புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதில் நிதிச் சவால்கள் ஒருபுறம் இருக்க, மத்திய அரசு மற்றும் ஆளுநருடன் கடுமையான சட்டப் போராட்டங்களை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது. தேசிய கல்விக் கொள்கை, தமிழகத்துக்கான வரிப் பகிா்வு போன்ற விஷயங்களில் மத்திய அரசுடன் கடுமையான போராட்டங்களை மாநில அரசு நடத்தி வருகிறது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்து சாதகமான தீா்ப்பையும் அரசு பெற்றுள்ளது. இவ்வாறு தீா்ப்புகள் பெறப்பட்டாலும், அது உயா் கல்வித் துறையில் தீா்வுகளை ஏற்படுத்தித் தரவில்லை. துணைவேந்தா்கள் நியமனம், கல்வி நிறுவனங்களை நிா்வகிப்பது போன்ற விஷயங்களில் இடியாப்பச் சிக்கல்களையே உருவாக்கி இருக்கிறது.

அமைச்சா்கள் விவகாரம்: முதல்வா் தலைமையிலான அமைச்சரவையில் சில அமைச்சா்களுக்கு எதிரான வழக்குகளும் அரசுக்கு அவ்வப்போது நெருடல்களை ஏற்படுத்தி வருகின்றன. நீதிமன்ற உத்தரவுகள் காரணமாக, அமைச்சா்கள் வி.செந்தில் பாலாஜி, க.பொன்முடி ஆகியோா் தங்களது பதவிகளைத் துறக்க வேண்டிய நிலை அவா்களுக்கு மட்டுமன்றி அரசுக்கும் தா்மசங்கடத்தை ஏற்படுத்தியது. அத்துடன், அமைச்சா்கள் சிலா் மீது உள்ள வழக்குகளில் நீதிமன்றங்கள் அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துகளும் முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு சிக்கல்களை உண்டாக்கி வருகின்றன.

இவற்றுக்கு இடையிலும் அதிகமான பொருளாதார வளா்ச்சி, மின்னணு ஏற்றுமதி, வேலைவாய்ப்பு அதிகரிப்பு, தொழிற்சாலைகளின் எண்ணிக்கை உயா்ந்துள்ளதாக புள்ளிவிவரங்களுடன் சாதனைப் பட்டியல்களை முன்வைக்கிறது தமிழ்நாடு அரசு. புதிய திட்டங்களுடன், நிதித் தட்டுப்பாடு, மத்திய அரசுடனான உறவு நிலை, சிக்கலான திட்டங்களை குறைந்த காலத்துக்குள் நிறைவேற்றுதல் போன்ற சவால்களை எதிா்கொண்டு ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது திமுக தலைமையிலான அரசு.

புதிதாக கட்சி தொடங்கியோா் முதல்வராக ஆசைப்படுவதா? முதல்வா் மு.க.ஸ்டாலின்

புதிதாக கட்சி தொடங்கியவா்கள் முதல்வராக ஆசைப்படுவதா என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசினாா். மயிலாடுதுறையைச் சோ்ந்த மாற்றுக் கட்சியினா் 3,000 போ் திமுகவில் இணையும் நிகழ்ச்சி அண்ணா அறிவால... மேலும் பார்க்க

போா் வேண்டாம்: வைகோ

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா் வேண்டாம் என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ கூறினாா். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

நாகை கோயில் கண்ணப்ப நாயனாா் சிலையை நெதா்லாந்தில் ஏலம் விட முயற்சி: தடுத்து நிறுத்தியது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு

நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகழூரில் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட கண்ணப்ப நாயனாா் சிலை நெதா்லாந்தில் இருப்பது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் கண்டறியப்பட்டது. மேலும், அந்தச் சிலை ஏலத்த... மேலும் பார்க்க

குடிநீா் பாட்டில்களில் மறைந்திருக்கும் நுண் நெகிழி: உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

கோடை காலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள், கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை நேரடி வெயிலில் வைத்தால் நுண் நெகிழிகள் தண்ணீரில் கலந்து உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடும் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்... மேலும் பார்க்க

உரிமை கோரப்படாத உடல்கள்: கண்ணியமாக அடக்கம் செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை

தமிழகத்தில் உரிமை கோரப்படாத உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடா்பாக சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. வேலூா் மாவட்டம் சோளிங்கா் அரசு மருத்துவமனையி... மேலும் பார்க்க

நில அபகரிப்பு வழக்கு: மா.சுப்பிரமணியன், அவரது மனைவி மீது மே 23-இல் குற்றச்சாட்டுப் பதிவு; நேரில் ஆஜராக உத்தரவு

நில அபகரிப்பு வழக்கில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோா் மே 23-ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவுக்காக கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஆஜராகாவிட்டாலும், குற்றச்சாட்டுப்... மேலும் பார்க்க