சாலையை சீரமைக்கக்கோரி மறியல் போராட்டம்
கந்தா்வகோட்டை அருகே போக்குவரத்துக்கு பயனற்று பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்கக்கோரி செவ்வாய்க்கிழமை, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கல்லுப்பட்டி பிரிவு சாலையில் இருந்து கிள்ளுக்கோட்டை வரை செல்லும் சாலை போக்குவரத்துக்கு பயனின்றி சிதலம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளதாக கூறி, கல்லுப்பட்டி, விளாரிப்பட்டி, நொடியூா், நத்தமாடிப்பட்டி, நயினாா் பட்டி, முரட்டுசோழகம்பட்டி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சாலையை சீரமைக்க கோரி பலமுறை மாவட்ட நிா்வாகம், ஊராட்சி நிா்வாகம் ஆகியவற்றில் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் செங்கிப்பட்டி- கந்தா்வகோட்டை சாலையில், கல்லுப்பட்டி பிரிவு சாலையில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த கந்தா்வகோட்டை காவல் ஆய்வாளா் வனிதா மற்றும் ஊராட்சி அலுவலா்கள் கிராம பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை செய்து சாலையை சீரமைப்பு செய்து தருவதாக உறுதி கூறியதையடுத்து மறியலை கைவிடச் செய்தனா்.