தென்னிந்திய பகுதிகளுக்கான புதிய ராணுவ தளபதி இன்று பொறுப்பேற்பு
சென்னை கல்லூரி மாணவன் கார் ஏற்றி கொலை - திமுக பிரமுகர் தனசேகரனின் பேரன் கைது பின்னணி
சென்னை, அயனாவரம், முத்தம்மன் தெருவைச் சேர்ந்தவர், நித்தின் சாய் ( 20). இவர், மயிலாப்பூரில் உள்ள தனியார் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். இவரின் நண்பன், அயனாவரம் பி.இ., கோயில் தெருவைச் சேர்ந்தவர் அபிஷேக் ( 20) இவரும், அதே கல்லுாரியில் படித்து வருகிறார். நண்பர்களான நித்தின் சாய், அபிஷேக் ஆகியோர் திருமங்கலம் பள்ளி சாலையில் உள்ள இன்னொரு நண்பன் மோகனின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டனர்.
பர்த்டே பார்ட்டி முடிந்த பிறகு நித்தின் சாய், அபிஷேக் பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது பைக்கை அபிஷேக் ஓட்ட, பின்னால் நித்தின்சாய் , ஹெல்மெட் அணியாமல் அமர்ந்திருந்தார். திருமங்கலம் பள்ளி சாலையில் இருந்து பார்க் சாலை நோக்கி சென்றபோது பின்னால் வந்த சொகுசு கார் பைக் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட, நித்தின் சாய்க்கு தலை, மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அபிஷேக் படுகாயங்களுடன் உயிர்தப்பினார்.

திட்டமிட்ட கொலை
இந்த விபத்து குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து கல்லூரி மாணவன் நித்தின் சாயின் சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த அபிஷேக், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர். விபத்து குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீஸார் விசாரித்து வந்த நிலையில், நித்தின் சாயின் தந்தை சுரேஷ் என்பவர், 'என் மகனை சொகுசு காரை ஏற்றி கொலை செய்துவிட்டதாக பரபரப்பான புகாரைக் கொடுத்தார்.
அதோடு தி.மு.க., கவுன்சிலர் கே.கே.நகர் தனசேகரனின் மகள் வழி பேரன் சந்துருவுக்கும் இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக நித்தின் சாயின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அதனால் இந்த வழக்கு திருமங்கலம் சட்டம் - ஒழுங்கு காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு சம்பவம் நடந்த இடத்தில் உள்ள 'சிசிடிவி'-க்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, வேகமாக வந்த சொகுசு கார், பைக்கின் மீது பயங்கரமாக மோதும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தது. அந்த சிசிடிவியில் சொகுசு காரை பின்நோக்கி எடுத்து மீண்டும் நித்தின் சாய் மீது ஏற்றும் காட்சிகளைப் பார்த்த போலீஸார், இது விபத்தல்ல, திட்டமிட்ட கொலை என முடிவு செய்தனர். அதனால் சொகுசு காரின் பதிவு நம்பர் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்கியதோடு கொலை வழக்கும் பதிவு செய்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் சொகுசு காரில் சென்னையைச் சேர்ந்த பிரனவ், சுதன், திமுக பிரமுகர் கே.கே.நகர் தனசேகரனின் பேரன் சந்துரு உள்பட சிலர் பயணித்தது தெரியவந்தது. இதையடுத்து பிரனவ், சுதனை போலீஸார் பிடித்து விசாரித்தனர். இந்தச் சூழலில் கே.கே.நகர் தனசேகரனின் குடும்பத்தினரே சந்துருவை திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைய வைத்தனர்.
அதைத் தொடர்ந்து சந்துருவையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் வழக்கறிஞர் ஒருவருக்கு சொந்தமான சொகுசு காரை போலீஸார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். அந்த வழக்கறிஞரின் மகன்தான் காரை ஒட்டியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவரிடம் விசாரணை காதல் விவகாரநடத்த போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள்.

காதல் விவகாரம்
இந்த வழக்கு குறித்து திருமங்கலம் போலீஸார் கூறுகையில், ``கே.கே.நகரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியை, நித்தின்சாயின் நண்பனான வெங்கடேசன் என்பவர், ஒரு தலையாக காதலித்தாக கூறப்படுகிறது. மாணவியை கே.கே.நகர் தனசேகரனின் பேரன் சந்துருவின் நண்பனான இசைக் கல்லுாரி மாணவன் பிரணவ் என்பவரும் காதலித்ததாக தெரிகிறது. இந்தக் காதல் மோதல் வெங்கடசன் தரப்புக்கும் பிரனவ் தரப்புக்கும் நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இந்தச் சூழலில்தான் நித்தின்சாயின் நண்பன் பிறந்தநாளுக்கு வெங்கடேசன் உடன் வந்த தகவல் பிரனவ் தரப்புக்கு தெரியவந்திருக்கிறது. உடனே வெங்கடேசனை மிரட்ட சொகுசு காரில் பிரனவ் தன்னுடைய நண்பர்களுடன் திருமங்கலம் பகுதிக்கு வந்திருக்கிறார். பின்னர் வெங்கடேசனை, அண்ணாநகர் காவல் நிலையம் அருகே வரவழைத்த பிரனவ் டீம் அங்கு அவரை மிரட்டியிருக்கிறது. அப்போது வெங்கடேசன் மீதும் காரை ஏற்றியதில் அவருக்கும் லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. வெங்கடேசனுக்கு பயத்தை ஏற்படுத்த திட்டமிட்ட பிரனவ் டீம், சொகுசு காரில் சென்று வெங்கடேசனின் நண்பர்களான நித்தின்சாய், அபிஷேக் சென்ற பைக் மீது மோதியிருக்கிறது.
ஆனால் கார் மோதியதில் நித்தின் சாய் உயிரிழந்துவிட்டார். அபிஷேக் சிகிச்சையிலிருக்கிறார். இந்த வழக்கில் சொகுசு காரில் கே.கே.நகர் தனசேகரனின் பேரன் சந்துரு பயணித்ததால் அவரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம். காயமடைந்த அபிஷேக், அவரின் நண்பன் வெங்கடேசன் ஆகியோரிடம் விசாரித்து வருகிறோம். கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவன் நித்தின்சாயின் குடும்பத்தினர் நீதி கிடைக்கும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என போராடி வந்தனர். சந்துரு கைது செய்யப்பட்ட தகவல் தெரிந்து நித்திய் சாயின் சடலத்தை அவர்கள் இன்று பெற்றுக் கொண்டனர். இந்த வழக்கில் பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கு தொடர்பு உள்ளது. அதோடு காதல் விவகாரத்தில் இந்தக் கொலை நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது" என்றனர்.