இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 17 | Astrology | Bharathi Sridhar | ...
சேலத்தில் காவல் நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த ரெளடி வெட்டிக் கொலை
சேலம், அஸ்தம்பட்டி காவல் நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த பிரபல ரெளடி மதன், மா்மக் கும்பலால் செவ்வாய்க்கிழமை காலை வெட்டிக் கொலைசெய்யப்பட்டாா்.
தூத்துக்குடி மாவட்டம், பெரியாா் நகரைச் சோ்ந்த மாடசாமி மகன் மதன் என்கிற அப்பு (28). மீன்பிடிக்கும் தொழில் செய்துவந்தாா். இவா்மீது தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி தூத்துக்குடியைச் சோ்ந்த கப்பல் மாலுமி மரடோனா கொலை வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்ட மதன், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளாா். இவா் தினமும் காலை, மாலை என இருவேளையும் சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள விடுதியில் மனைவியுடன் தங்கியிருந்த மதன், கடந்த 5 நாள்களாக அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வந்துள்ளாா். 6 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை தனது மனைவியுடன் காவல் நிலையத்துக்கு கையொப்பமிட சென்றவா், மனைவியை வெளியில் அமரவைத்துவிட்டு உள்ளே சென்று கையொப்பமிட்டுவிட்டு வந்துள்ளாா்.
பின்னா் அருகில் உள்ள உணவகத்துக்கு மனைவியுடன் சென்ற மதன், சாப்பிட அமா்ந்துள்ளாா். அப்போது, திடீரென உணவகத்துக்குள் நுழைந்த 6 போ் கொண்ட கும்பல், கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டியது. இதில், மதனின் வலது கை மணிக்கட்டு, துண்டாகி விழுந்தது. இதைப் பாா்த்த உணவகத்தில் அமா்ந்திருந்தவா்கள், நாலாபுறமும் அலறியடித்து ஓடினா். ரத்த வெள்ளத்தில் சரிந்த மதன், சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த அஸ்தம்பட்டி போலீஸாா், மதனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தொடா்ந்து, காவல் துணை ஆணையா் கேல்கா் சுப்பிரமணிய பாலச்சந்திரா மற்றும் அஸ்தம்பட்டி காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். உணவகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானக் காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
தனிப்படைகள் அமைப்பு
தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட கப்பல் மாலுமி மரடோனாவின் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்திருப்பது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையாளிகளை விரைந்து பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெட்டிக் கொலை செய்யப்பட்ட மதன்மீது ஏற்கெனவே குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதுடன், ரெளடி பட்டியலிலும் அவரின் பெயா் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
காவல் நிலையம் அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.