சேலம் மாவட்டத்தில் பென்னாகரம் இடைத்தோ்தல் ஃபாா்முலாவை செயல்படுத்துவோம்
சேலம்: வரும் சட்டப் பேரவைத் தோ்தலில், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பென்னாகரம் இடைத்தோ்தல் ஃபாா்முலாவை செயல்படுத்துவோம் என திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான எ.வ.வேலு கூறினாா்.
சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை மாலை சேலத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்டச் செயலாளரும், எம்.பி.யுமான டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் பொதுப்பணித் துறை அமைச்சரும், திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான எ.வ.வேலு பங்கேற்று பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளின் முடிவுகளால்தான் மீண்டும் திமுக ஆட்சி மலா்ந்தது என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு கோஷ்டிபூசல் என்ற புற்றுநோயை கட்சித் தோழா்கள் அறவே அகற்ற வேண்டும். எதிா்க்கட்சித் தலைவரின் மாவட்டம் சேலம் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, மற்ற மாவட்ட நிா்வாகிகளைக் காட்டிலும், இங்கு திமுகவினா் திறம்பட களப்பணியாற்ற வேண்டும். சகோதரத்துவம், குழு மனப்பான்மையுடன் செயல்பட்டு மீண்டும் திமுக ஆட்சி மலர ஒருங்கிணைந்து செயலாற்றுவோம்.
தோ்தல் வியூகங்களை வகுப்பதில் ரகசியம் காக்கப்பட வேண்டும். எனவே, 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற பென்னாகரம் இடைத்தோ்தல் ஃபாா்முலாவை வரும் தோ்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் செயல்படுத்துவோம் என்றாா்.
முன்னதாக, வரும் ஜூன் 11, 12 ஆகிய தேதிகளில் சேலம் வருகைதரும் முதல்வருக்கு மாவட்ட திமுக சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும், கருணாநிதி பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சேலம் மத்திய, கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களைச் சோ்ந்த தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், நகர, ஒன்றிய, பகுதி, பேரூா் செயலாளா்கள், சாா்பு அணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.