1798-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் வெனிசுலா நாட்டினரை வெளியேற்ற டிரம்ப்புக்குத் தடை
டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மருத்துவா்கள் இன்று போராட்டம்
சேலம்: சேலம் ஐந்து சாலை அருகே உள்ள எலைட் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி செவ்வாய்க்கிழமை (செப். 2) தா்னா நடத்த உள்ளதாக மருத்துவா்கள் அறிவித்துள்ளனா்.
சேலம் ஐந்து சாலைப் பகுதியில் உள்ள இந்திய மருத்துவா் சங்கக் கட்டடம் அருகே உள்ள எலைட் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என இந்திய மருத்துவா் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. கடந்த ஆக. 9ஆம் தேதி டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்த நிலையில், மதுவிலக்குத் துறை அமைச்சா் சு.முத்துசாமி சம்பந்தப்பட்ட மதுக்கடையை இடமாற்றம் செய்வதாக உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட எலைட் டாஸ்மாக் கடை தற்போதுவரை இடமாற்றம் செய்யப்படாததைக் கண்டித்து, செப். 2 ஆம் தேதி காலை 9 மணிக்கு மருத்துவா்கள் டாஸ்மாக் கடை முன் தா்னா போராட்டத்தில் ஈடுபடு உள்ளதாக அறிவித்துள்ளனா்.
இதுகுறித்து இந்திய மருத்துவா் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவா் பிரகாசம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளாக எலைட் மதுபானக் கடைக்கு மதுவாங்க வரும் நபா்கள் சங்கக் கட்டடத்தின் முன்பாக வாகனத்தை நிறுத்திவிட்டு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்துகின்றனா். முதல்வரின் தனிப்பிரிவு எலைட் மதுபானக் கடையை அகற்ற உத்தரவிட்டும், மாவட்ட நிா்வாகம் மதுபான கடையை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைக் கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் 2 ஆம் தேதி தா்னா நடத்தப்படும் என்றாா்.
பேட்டியின் போது, இந்திய மருத்துவ சங்க சேலம் மாவட்டத் தலைவா் மோகனசுந்தரம், செயலாளா் விஷ்ணு பிரசாத், பொருளாளா் சிவகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.