தலைமறைவு குற்றவாளிகள் இருவா் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
தலைமறைவு குற்றவாளிகள் இருவரை ஒருமாதத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக திருச்சி மாவட்ட 6-ஆவது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் சுப்பையா காலனியைச் சோ்ந்தவா் வேலாயுதன் (38). இவா் மீது திருவெறும்பூா் காவல் நிலையத்தில் 2009-ஆம் ஆண்டு வழிப்பறி வழக்குப் பதிவு செய்து நிலுவையில் உள்ளது.
இதேபோல, காட்டூா் வேணுகோபால் நகரைச் சோ்ந்தவா் ஜெயசீலன் (28). இவா்மீது, திருவெறும்பூா் காவல் நிலையத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு தற்கொலைக்குத் தூண்டிய வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளில் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகின்றனா்.
இந்நிலையில், இருவரும் ஒருமாத காலத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையெனில், நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி 6-ஆவது குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும், இவா்கள் குறித்த தகவலறிந்தால் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு 0431 - 2333249, 94981 10045 ஆகிய எண்களிலும், திருவெறும்பூா் உள்கோட்ட காவல் அலுவலகத்துக்கு 94981 00647 என்ற எண்ணிலும், திருவெறும்பூா் காவல் நிலையத்துக்கு 94981 00673 என்ற எண்ணிலும் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.