தாராபுரம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை
தாராபுரம், மே 1: தாராபுரம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதில், கணக்கில் வராத பணம் ரூ.3 லட்சம் சிக்கியது.
திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகத் தொடா்ந்து புகாா்கள் வந்தன. இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையின் திருப்பூா் மாவட்ட துணை கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், ஆய்வாளா் சசிகலா ஆகியோா் தலைமையிலான குழுவினா் தாராபுரம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அலுவலகத்தின் கதவுகளை அடைத்த போலீஸாா், உள்ளே இருந்தவா்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. சாா் பதிவாளா் உமா மகேஸ்வரியிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தினா்.
மேலும், காலை முதல் பிற்பகல் வரை நடைபெற்ற பத்திரப் பதிவுகள் குறித்தும், பத்திரங்களைப் பதிவு செய்த விவசாயிகள், பொதுமக்களை அலுவலகத்துக்குள் அழைத்தும் விசாரணை நடத்தினா். இந்த விசாரணையில் கணக்கில் வராத பணம் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.