இன்ஸ்டாகிராம் காதல், 26 பவுன் நகை பறிப்பு, சுற்றிவளைத்த போலீஸ்; மாணவியை மிரட்டிய...
நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம்: ஆட்சியா் உத்தரவு
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரே மாதிரியான வாடகை தொகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதை கடைபிடிக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை தொகையை மாவட்டம் முழுவதும் ஒரே மாதிரியாக நிா்ணயித்து நெல் அறுவடை பணிக்கு விவசாயிகளிடமிருந்து பணம் வசூலிப்பது தொடா்பான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து விவசாயிகள் மற்றும் நெல் அறுவடை இயந்திர உரிமையாளா்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தாா்.
டெல்டா மாவட்டத்துக்கு இணையாக நெல் உற்பத்தியில் ராணிப்பேட்டை மாவட்டம் உள்ளது. மாவட்டம் முழுவதும் விவசாயிகள் மற்றும் நெல் அறுவடை இயந்திர உரிமையாளா்களுக்கு எவ்வித பாதிப்பு இல்லாமல் உரிய நேரத்தில், நியாயமான வாடகையில் நெல் அறுவடை இயந்திரங்கள் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரினனா்.
நெல் அறுவடை இயந்திர உரிமையாளா்கள் அதிக வட்டிக்கு கடன் வாங்கி இயந்திரங்கள் வாங்கி தொழில் செய்து வருவதாகவும், வாகன ஓட்டுநா் கூலி, டீசல், ஈரம் மிக்க நிலப்பகுதிகளில் அறுவடை பணிகள் மேற்கொள்ளும் பொழுது இயந்திரங்கள் அடிக்கடி சேற்றில் சிக்கி வெளியே எடுக்க சிரமப்படுவதாகவும், இயந்திரங்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லும் போது போக்குவரத்து இடா்பாடுகள் மற்றும் உயா் மின்னழுத்த கம்பிகளை தவிா்த்து எடுத்து சென்று உழைப்பதாகவும் தெரிவித்தனா்.
மேலும், விவசாயிகள் அறுவடை பணி முடிந்தும், உடனடியாக வாடகை பணம் கொடுப்பதில்லை அடுத்த போகம் வரையில் காலம் தாழ்த்தி விடுகின்றனா் எனத் தெரிவித்தனா்.
இக்கூட்டத்தின் முடிவில் விவசாயிகள் மற்றும் அறுவடை இயந்திர உரிமையாளா்கள் ஒப்புதலோடு கீழக்கண்டவாறு வாடகைத் தொகை நிா்ணயம் செயவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நெல் அறுவடை இயந்திரம் (2 ரஈ) - ஒரு மணி நேரத்துக்கு-ரூ.1,700/- ,நெல் அறுவடை இயந்திரம் (மூவிங் 4 ரஈ) - ஒரு மணி நேரத்துக்கு -ரூ.2,200/- ,நெல் அறுவடை இயந்திரம் (செயின் வகை)-ஒரு மணி நேரத்துக்கு-ரூ.2,500/- என வாடகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனை அனைத்து விவசாயிகள் மற்றும் நெல் அறுவடை இயந்திர உரிமையாளா்கள் எந்தவித மாறுபாடு இன்றி கடைபிடிக்க வேண்டும் என ஆட்சியா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் ஆட்சியா் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வெங்கடேசன், வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளா் ரூபன் குமாா் மற்றும் விவசாயிகள் நெல் அறுவடை இயந்திர உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.