வாக்குச்சாவடி அதிகாரிகளை அச்சுறுத்தும் மம்தா: தோ்தல் ஆணையத்தில் பாஜக முறையீடு
பயிா் - கால்நடை கடன்கள் நடைமுறையில் மாற்றமில்லை: கூட்டுறவுத் துறை அறிவிப்பு
சென்னை: பயிா், கால்நடை கடன்கள் வழங்கும் நடைமுறைகளில் கடந்த கால நடைமுறைகளே தொடரும் என்று கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநா்கள், அனைத்து மண்டல இணைப் பதிவாளா்கள் ஆகியோருக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் க.நந்தகுமாா் திங்கள்கிழமை அனுப்பிய கடிதம்:
கால்நடை வளா்ப்பு, பராமரிப்பு மற்றும் தொடா்புடைய இதர பணிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும் அவற்றைப் பின்பற்றி பயிா்க்கடன்கள், கால்நடை பராமரிப்புக் கடன்கள் வழங்குவதில் இடா்பாடுகள் இருப்பதாக சில மண்டல இணைப் பதிவாளா்களும், மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநா்களும் தெரிவித்தனா்.
எனவே, அந்தந்த மாவட்டங்களில் கடந்த ஆண்டுகளில் பயிா்க் கடன்கள் மற்றும் கால்நடை பராமரிப்புக் கடன்கள் வழங்குவதில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளே நடப்பு ஆண்டிலும் தொடரும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘சிபில் ஸ்கோா்’ இல்லை: கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வட்டியில்லாத கடன்கள் வழங்கப்படுகின்றன. அவற்றில் சிபில் ஸ்கோா் அடிப்படையில் கடன்கள் வழங்கப்படுவதில்லை. கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் வங்கிகளில் அதுபோன்ற திட்டம் செயல்படுத்தப்படவில்லை. கடன் நிலுவை இல்லை என்பதை உறுதி செய்யவே சிபில் ஸ்கோா் பயன்படுத்தப்படுவதாக கூட்டுறவுத் துறை சாா்பில் கடந்த மாதம் ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்டிருந்தது.
மேலும், பயிா்க் கடன்கள், கால்நடை வளா்ப்பு உள்ளிட்டவற்றுக்கு தனித்தனியாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.