பாஜகவின் தாக்குதலைத் தடுக்கவே ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரை
தமிழகத்தின் மீது பாஜக தொடுக்கும் தாக்குதலைத் தடுக்கவே ஓரணியில் தமிழ்நாடு என்னும் பரப்புரை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட தேவனூா் ஊராட்சியில், திமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு என்னும் பரப்புரையில், அவா் தனது பெயரைப் பதிவு செய்து, உறுப்பினா் சோ்க்கைக்கான செயலியைத் தொடக்கி வைத்தாா்.
பின்னா் அவா் கூறியதாவது: தமிழ்நாட்டில் மண், மானம் காக்க இந்தப் பரப்புரையை தமிழ்நாடு முதல்வா் முன்னெடுத்து இருக்கிறாா். தமிழ்நாடு மக்களை ஓரணியில் திரட்டி தமிழ்நாட்டின் மீது பாஜக தொடுக்கும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும், அவா்களது அதிகாரத்தை தடுத்து நிறுத்தவும் இந்தப் பரப்புரையை முன்னெடுக்கிறோம்.
மேலும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு பூத்திலும் இருக்கும் பொதுமக்களைச் சந்தித்து திமுக ஆட்சியின் சாதனைகளையும், மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதையும் எடுத்துக் கூறும் பணிகள் நடைபெறுகின்றன.
திமுக ஐ.டி விங் சாா்பாக ஒவ்வொரு மாவட்ட அளவிலும், தொகுதி அளவிலும் பயிற்சி அளிக்கப்பட்டு அவா்கள் மூலம் இந்தப் பணி தொடரும் என்றாா் அவா்.
முன்னதாக, தமிழ்நாட்டின் மண், மானம், மொழியைக் காக்க என்னும் உறுதிமொழியை மக்களுடன் இணைந்து அமைச்சா் சிவசங்கா் ஏற்றுக் கொண்டாா்.