பாஜக ஆட்சியில் பட்டியலினத்தவர் கூக்குரல்களைக் கேட்க யாருமில்லை: பிரியங்கா காந்தி
உத்தரப் பிரதேசத்தில் பட்டியலினப் பெண் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் அயோத்தியில் பட்டியலினப் பெண்ணின் படுகொலை சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா தேவி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எம்.பி. பிரியங்கா காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, ``அயோத்தியில் பகவத் கதையைக் கேட்கச் சென்ற ஒரு பட்டியலினப் பெண்ணிக்கு இழைக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனம் போன்ற கொடூரமான சம்பவங்கள் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் அவமானப்படுத்துகின்றன.
கடந்த மூன்று நாள்களாக பெண் காணாமல் போயிருந்தாள், ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பாஜகவின் ஆட்சியில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள், ஏழைகளின் கூக்குரல்களைக் கேட்க யாரும் இல்லை. பட்டியலினத்தவர்கள் மீதான அட்டூழியங்களுக்கு இணையாக உத்தரப் பிரதேச அரசு மாறிவிட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், பொறுப்பான காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களுடன் பேசிய சமாஜவாதி எம்.பி. அவதேஷ் பிரசாத், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காவிட்டால், மக்களவை பதவியை ராஜிநாமா செய்வதாகவும் கூறினார்.
உத்தரப் பிரதேசத்தில் அயோத்தியில் பட்டியலினப் பெண் ஒருவர், ஜனவரி 30ஆம் தேதி இரவு பகவத் கதை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றபின், வீடு திரும்பவில்லை என்று அப்பெண்ணின் குடும்பத்தினர் ஜனவரி 31 ஆம் தேதியில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, பெண்ணை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் மூன்று நாள்களுக்குப் பிறகு, காணாமல் போயிருந்த பெண் உடல் முழுவதும் காயங்களுடன், கால்கள் கட்டப்பட்டு, கண்கள் தோண்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு சடலமாக ஒரு வயலில் கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, ``பெண்ணின் உடல் கிடந்த இடத்தில் கொலை சம்பவம் நிகழவில்லை. பெண் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக, சந்தேகத்துக்கிடமான நபர் ஒருவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறார்.
தற்போது வரை மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விரைவில் முறியடிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றத்தின் மூலம் கடுமையான தண்டனை வழங்கப்படும்’’ என்று காவல்துறை அதிகாரி கூறினார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.